அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற’து.
இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
13 பேர் தீவிரவாதிகளால் சிறைப்பிடிப்பு! அச்சப்பட வேண்டாம் என ஆஸ். பிரதமர் வேண்டுகோள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நுழைந்த தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி முனையில் 13 பேரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளான். அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் கொடி காணப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள முக்கிய அலுவலகங்களிலிருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் கொடி உள்ளதாக கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிணையக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து மேலும் பேசிய பிரதமர் டோனி அபாட், தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். 13 பேரை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்கள் அச்சப்படாமல் வழக்கம்போல அவரவர் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது சந்தேகம்படும் படியான நடவடிக்கைகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக தேசிய பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
-http://www.nakkheeran.in