பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது.

pakis1
தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவர்

 

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும் பணி தற்போது நடந்து வருகிறது. பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலாவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வாமாகாண முதல்வர் கூறினார்.

பாகிஸ்தான் இராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை நடத்துகிறது. இதில் இராணுவத்தினரின் குழந்தைகளே பெரும்பாலும் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக் கூடத்தில் 500 பேர் படித்து வந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பள்ளி மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள். மாணவர்கள் சிலர் மேஜைகளுக்கு கீழே ஒளிந்து கொண்டும், செத்த பிணம் போல் கீழே விழந்து கிடந்தும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பியுள்ளனர். தாக்குதலில் தப்பி வந்த மாணவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். அவர்களை படையினர் அரவணைத்து வெளியே அழைத்து வந்தனர்.

pakis2
பயத்தில் வெளியேறும் மாணவிகள்

 

துப்பாக்கிதாரிகள் ஒவ்வொறு வகுப்பாக நுழைந்து கண்மூடித்தனமாக மாணவர்களைச் சுட்டுக் கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பலர் தலையில் சுடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

pakis3
எதிர் தாக்குதலில் பாகிஸ்தானியப் படைகள்

 

இந்த முற்றுகை மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் முயற்சிகளை செய்து வருகின்றனர். மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்திய அனைத்துத் தீவிரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

pakis4
பாதுகாப்பாக இரு சிறார்களை மீட்டுவரும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர்

 

வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கைபர் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானியத் தாலிபானின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டித்துள்ளார். அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி, நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். -BBC

பாகிஸ்தானில் 132 பள்ளிக் குழந்தைகள் சுட்டுக்கொலை: மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்

narendra_modiAபாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில், 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பள்ளியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும், பலியான பள்ளி குழந்தைகளுக்காக இந்தியாவின் இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று (புதன்கிழமை) 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

-http://www.nakkheeran.in