அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன.
கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதான செய்தியை அறிவித்தது.
இது தொடர்பிலான முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், க்யூபத் தலைவர் ரவுல் காஸ்ட்ரோவும் வெளியிட்டனர்.
முறிந்து போயிருந்த அமெரிக்க-க்யூப உறவுகளை சீர் செய்வதில் ஒரு பெரிய தடைக்கல்லாக கிராஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இருந்து வந்தது.
கிராஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று க்யூப நாட்டுப் பிரஜைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட செயற்கைகோள் தொழில்நுட்பத்தை தமது நாட்டுக்குள் கொண்டுவந்தார் என்று குற்றஞ்சாட்டி அவரை ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் அதிகாரிகள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
விடுவிக்கப்பட்டுள்ள ஆலன் கிராஸ் அவர்கள் அமெரிக்கா திரும்புகிறார்.
“தோல்வியடைந்த கொள்கை”
இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, க்யூபாவின் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகம் அடுத்த சில மாதங்களில் திறக்கப்படும் என்று வாஷிங்டன் அறிவித்துள்ளது.
அதேபோல பயணம் மற்றும் வர்த்தகத் தடைகளும் தளர்த்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தைக் கொண்டுவரும் நோக்கில் பல ஆண்டுகளாக, கம்யூனிஸ நாடான க்யூபாவைத் தனிமைப்படுத்தி வைக்கும் தனது லட்சியம் எதிர்பார்க்கப்பட்ட பலனை அளிப்பதில் தோல்வியடைந்துவிட்டது என்பதையும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது. -BBC