தலாய் லாமா எனும் மதத் தலைவர் பதவியை வகிக்கும் கடைசி நபர் தானாவே இருக்கக் கூடும் என்று தற்போதையத் தலைவர் கூறுகிறார்.
திபேத்திய ஆன்மீகத் தலைவரான அவர் இப்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.
பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் நிறுவன அமைப்பு முடிவுக்கு வருமாயின், தலாய் லாமா எனும் பட்டமும் முடிவுக்கு வருவது நல்லது என்று தான் கருதுவதாக அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா பதவிக்கு இனி அரசியல் பொறுப்புகள் ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், 2011 ஆம் ஆண்டில், நாடுகடந்த திபேத்திய அரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட லாப்சாங் சாங்கேயிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.
“முடிவு திபேத்திய மக்கள் கையில்”
தனக்கு அடுத்து இன்னொரு தலாய் லாமா வரவேண்டுமா என்பது திபேத்திய மக்களின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
தான் இறக்கும் வேளையில், தலாய் லாமா எனும் அந்த பட்டம் என்பது தேவையற்ற ஒன்றாக இருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் அவருக்கு அடுத்தவர் யார் என்பதை தாங்கள் தேர்வு செய்வோம் என்று சீனா கூறியுள்ளது.
கடந்த 1959 ஆம் ஆண்டு திபேத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை சீனத் துருப்புக்கள் ஒடுக்கியபோது, தலாய் லாமா இந்தியாவுக்கு தப்பியோடினார்.
சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதி என்று சீன அரசு கருதுகிறது.
இவ்வேளையில், தற்போது சீனாவிலிருந்து திபேத் விடுதலைப்பெற வேண்டும் என்பதைத் துறந்து, சுயாட்சி எனும் மையப்பாதையை அவர் வலியுறுத்தி வருகிறார். -BBC