உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் “செக்ஸ்டார்ஷன்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது.
இதன் முதற்கட்டம் என்பது சமூக வலைத்தளங்களின் மூலம் ஆண்களை வசீகரித்து இழுப்பது. பிறகு அவர்களை அவர்களின் குடும்பத்தவர் மற்றும் நண்பர்களிடம் காட்டிக்கொடுப்பேன் என்று மிரட்டி பணம் பறிப்பது.
இப்படி பணம் பறிக்கும் கும்பல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கின்றன. சமீபகாலத்தில் இது ஒரு பெருந்தொழிலாகவே வளர்ந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருக்கும் குடிசைகள் இந்த இணையவழி மிரட்டல் பணம் பறிக்கும் குற்றக்கும்பல்களின் தலைமையகமாக மாறிவருவதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த மோசடிப்பேர்வழிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களை கறக்கிறார்கள்.
இப்படி செயற்படும் இணைய மிரட்டல் கும்பல்களை சமீபத்தில் இணைய மோசடிகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினர் சோதனை செய்தபோது இதற்காக முழுநேர வேலையில் இளம் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் என்று ஏதோ தொழிற்சாலை பணியாளர்களைப்போல இவர்கள் வேலை செய்கிறார்கள்.
மோசடி எப்படி நடக்கிறது?
அழகான பெண்ணிடமிருந்து உங்களுக்கு இணையம் மூலம் அழைப்பு வரும்.
அடுத்த கட்டம் அந்தரங்கமாக வெப்கேம் மூலம் பேசலாமே என்று சிநேகிதமாகவும் செல்லமாகவும் கோரிக்கை விடுக்கப்படும். அந்த செல்லச்சிணுங்கலுக்கு செவி சாய்த்து வெப்கேம் அதாவது இணைய கேமரா மூலம் அந்தரங்கமாக பேசினால் உங்களின் அந்த ஒட்டுமொத்த உரையாடலும் பதிவு செய்யப்படும்.
இதில் பேசும் பெண் பெரும்பாலான சமயங்களில் உண்மையான மனிதப்பெண் அல்ல என்பதே இதில் பாதிக்கப்படும் ஆண்கள் பலருக்கும் தெரியாது.
கணினியில் வரையப்பட்ட அழகான பெண்ணின் காணொளிகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, கணினியில் தானியங்கி முறையில் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஆண்களில் பலர் பேசுவது கணினியின் செயற்கைப் பெண்ணிடமே.
காவல்துறையினர் இந்த மோசடிக்கும்பல்களை கண்டுபிடித்து தண்டிக்க முயன்று வருகிறார்கள். ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் கூச்சம் காரணமாக தங்களுக்கு நேர்ந்த அநியாயத்தை காவல்துறையிடம் பகிரங்கமாக பேசத்தயங்குகிறார்கள். -BBC