முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது “பெரிய தமாஷ்”

2008 தேர்தலின்போது அழியா மையைப் பயன்படுத்த முடிவுசெய்து பின்னர் அம்முடிவு கைவிட்டதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்ட தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், இப்போது அழியா மை பயன்படுத்தப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறார்.

சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்னதாக முடிவை மாற்றிக்கொண்டது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதைத் தம் 26 ஆண்டுக்கால “தேர்தல் அதிகாரி” வாழ்க்கையில் ஏற்பட்ட “ மிகப் பெரிய தோல்வி”யாகக் கருதுகிறார்.

“பணி துறக்கலாம் என்றுகூட முடிவுசெய்தேன். நண்பர்கள் வேண்டாம் என்று தடுத்து விட்டனர்.” கடந்த வாரம் மலேசியாகினி மின்னஞ்சல்வழி நடத்திய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அழியா மை பயன்படுத்துவதை ஆதரிக்கும் அப்துல் ரஷிட், தேர்தலில் ஏமாற்றுவேலை நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்றும் ஆனாலும் வாக்களிப்பு நேர்மையாக நடப்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக அதைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். அதனால்தான் அன்று அதைப் பயன்படுத்த இசி ஆயத்தமாக இருந்தது.

அப்படி முடிவுசெய்யப்பட்ட ஒன்றின் பயனீடு பற்றி இப்போது இசி “ஆராய்வதாகக் கூறுவது பெரிய தமாஷாக இருக்கிறது”, என்றாரவர்.

அப்துல் ரஷிட், கேமிராவில் முகம் காட்டி பேச விரும்பவில்லை, பணி ஓய்வுக் காலத்தில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. என்றாலும் தேர்தல் சீரமைப்பு பற்றிய கேள்விகளுக்கு வெளிப்படையாகவே அவர் பதிலளித்தார்.

மலேசியாகினி: நீங்கள் இசி தலைவராக இருந்தபோது எப்படிப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன?அவற்றின் தொடர்பில் அரசாங்கத் தலைவர்கள் அல்லது அரசுத்துறைகளிடமிருந்து எப்படிப்பட்ட சவால்களை எதிர்நோக்கினீர்கள்?

அப்துல் ரஷிட்: அரசாங்கமோ அரசுத்துறைகளோ எவ்வித கோரிக்கையையும் முன்வைத்ததில்லை. டிஏபி, பாஸ், பிகேஆர் போன்ற அரசியல் கட்சிகள்தாம் எங்களை வந்து சந்தித்தன. அவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களின் குறைபாடுகளைக் குறித்துக் கொண்டோம்.

அரசமைப்பைத் திருத்தம் செய்தல், தேர்தல் சட்டத் திருத்தம், வாக்காளர் பதிவைத் திருத்துதல் முதலியவை அவர்களின் கோரிக்கைகளில் அடங்கியிருந்தன. அவர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டாலும் அவற்றுக்கேற்ப திருத்தங்கள் செய்வதற்கு நாளாகும் எனக் கருதப்பட்டது.

அதனால், வாக்காளர் பட்டியல் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது என்பதால் அதனைத் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பதே எங்களின் முடிவாக இருந்தது.

அழியா மையைப் பொருத்தவரை….என் 26 ஆண்டுக்கால இசி வாழ்க்கையில் ஆறு பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பில் மோசடி நடந்ததென்று எவரும் நிரூபித்ததில்லை…என்றாலும் அழியா மை பயன்படுத்தப்படுவதை இசி ஏற்றுகொண்டது.

அதைப் பயன்படுத்தினால்தான்  வாக்களிப்பில் ஏமாற்றுவேலை இல்லை என்று மக்கள் நம்புவார்கள் என்றால் அப்படியே செய்வோமே என்று நினைத்தோம்.

ஆனால், அரசாங்கம் அக்கருத்தில் மாறுபட்டது. அதனால், கடைசி நேரத்தில் அம்முடிவைக் கைவிட வேண்டியதாயிற்று. அது, தேர்தல் அதிகாரி என்ற முறையில் என் கடமையைச் செய்வதில் ஏற்பட்ட ஒரு தோல்வி என்று கருதப்பட்டால், அதுவே என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாக இருக்கும்.

அழியா மையைப் பயன்படுத்துவதில்லை என்று 2008, ஏப்ரல் 13-இல் முடிவு செய்யப்பட்டது. அன்றுதான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது.

நான் பதவிவிலகலாமா என்று யோசிக்கலானேன். ஆனால், உற்ற நண்பர்கள் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள்.

அம்முடிவினால் ஆத்திரமடைந்த மக்கள் என்னைக் குறைகூறினார்கள். என் வீட்டின்மீது சிகப்புச் சாயத்தையும் வீசி அடித்தார்கள். அழியா மை கைவிடப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று அரசியல் கட்சிகள் அவர்களை நம்ப வைத்திருந்ததால் அவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள்.

இப்போது தேர்தல் அமைப்பு அழியா மை பற்றி மறுபடியும் யோசிப்பதாவும் அதற்கு அரசாங்க ஆதரவு இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்….

எனக்கு இது வேடிக்கையாக தெரிகிறது. ஏற்கனவே ஆராய்ந்து முடிவுசெய்யப்பட்ட ஒன்றை இப்போது மறுபடியும் ஆராய்கிறார்களாம்…..இதுதான் பெரிய தமாஷ்.

பெர்சே பேரணிகள் நடக்கும், தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைக்கப்படும் என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தது உண்டா?

தெரு ஆர்ப்பாட்டம், நீண்டநாட்களாகவே எதிர்ப்பார்த்த ஒன்றுதான். அதற்காகத்தான் அழியா மை பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால். சிலர் அதை ஏற்கவில்லை. அதை எதிர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தையும் தூண்டிவிட்டார்கள். அது, அநாகரிகமான, மடத்தனமான செயல் என்றுதான் நினைக்கிறேன்.

தேர்தல் நடைமுறைகள் பற்றி நிறைய கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அதைச் சமுதாயம் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகக் கருதுவீர்களா?

தேர்தல் அமைப்புமுறையில் பலவீனங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். அதைத் தவிர்த்து, ஜனநாயகம் மலேசியாவில் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதுதான் உண்மை. 1957-இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டில் 12 தடவை ஜனநாயக முறைப்படி பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு சட்டப்பூர்வ அரசாங்கங்கள் அமைந்துள்ளன.

கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் எல்லாம் முதிர்ச்சி அடைந்துவரும் நம் சமுதாயம் இப்போது ஒரு புதிய காலக்கட்டத்தில் அடியெடுத்து வைத்திருப்பதற்கான அறிகுறிகளாகும். இதை நாடு உணர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னே அரசியல் தூண்டுதல் இருந்தாலும் மக்களின் நலனை முன்னிட்டே அப்படிப்பட்ட கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

ஒரு நவீன சமுதாயம் அவற்றையெல்லாம்  எதிர்ப்பார்க்கிறது. அழும் பிள்ளைக்கு சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்தும் காலம் மலையேறிவிட்டது. என்னைக் கேட்டால், ஆட்சியில் உள்ளோர், அரசியல் உறுதிப்பாடு கொண்டு சில சீரமைப்புகளைச் செய்ய முன்வரவேண்டும் என்பேன். அதை அவசரப்பட்டுச் செய்ய வேண்டியதில்லை. படிப்படியாகவே செய்யலாம்.

பெர்சே 2.0 பேரணிக்கு இசியின் எதிர்வினை குறித்து உங்களின் கருத்து என்ன?

பெர்சேக்கு எதிராக இசி எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அறியேன். அதனால் கருத்துரைப்பதற்கு இல்லை.

அண்மையில், துணைப் பிரதமர் முகைதின் யாசின், சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து விசாரிக்க அரச ஆணையம் அமைக்கும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை என்று கூறியிருந்தார். நீங்கள் இசி தலைவராக இருந்த காலத்தில், சட்டவிரோத குடியேறிகள் சாபாவுக்குள் வந்து குவிந்தது பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அதன் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

நான் இசி தலைவராக இருந்தபோது  சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் பெரிய எண்ணிக்கையில் குடியேறியதாக நம்பத்தக்க தகவல் எதையும் பெற்றதில்லை. இது பற்றி நம்பமுடியாத தகவல்கள்தான் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எல்லாமே யாரோ சொல்லிக் கேள்விப்பட்ட விசயங்களாகத்தான் இருக்கும்.எனவே, அதைப் பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை. ஊகத்தின் அடிப்படையில்தான் அது பற்றிக் கருத்துரைக்க வேண்டியிருக்கும். அது  அரசியல் சார்ந்ததாகவும் தோன்றலாம். அது சங்கடமான விசயம், வேண்டாம்.

TAGS: