அபுஜா, ஜன. 9– ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட கிழக்கில் உள்ள போர்னோ மாகாணத்தில் பாகா நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடந்த 2 நாட்களாக இவர்கள் கோரத்தாண்டவம் ஆடினர்.
சமீபத்தில் இப்பகுதியை ஆக்கிரமித்த அவர்கள் பாகா நகரில் புகுந்து பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கின்றன.
இவை தவிர பாகாவில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர். அதை சுற்றியுள்ள 16 கிராமங்களும் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
அங்கிருந்த மக்கள் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் குடும்பங்களுடன் வெளியேறி விட்டனர். இதனால் அங்கு மயான அமைதி நிலவுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நைஜீரியாவில் 10 ஆயிரம் பேரை தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.maalaimalar.com