கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை!

சுட்டுக்கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் ஆதரவாளர்கள் 50 பேர் கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நியூயோர்க் நகரிலிருந்து செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று தனது இணையதளத்தில் ‌தெரிவித்திருப்பதாவது:

கடந்த 21-ம் திகதி லிபிய தலைவர் கடாபி, கிளர்ச்சிப் படைகளினால் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர்  சுட்டுக்கொல்லப்பட்டார். அதே நாளில் அவரது சொந்த ஊரான சிர்டி நகரில் உள்ள மெகாரி என்ற தங்கும் விடுதி வளாகத்தில் 50 பேர் தலையில் குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் பீட்டர் புகாரெயிட் கூறுகையில், கடாபி கொல்லப்பட்ட நாளன்றுதான் இவர்கள் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்கள் இருந்துள்ளன என்றார்.

இதிலிருந்து அவர்கள் கிளர்ச்சிப் படையினரால் கொடூரமாக கொ‌ல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இவ்விவகாரம் குறித்து லிபியா இடைக்கால அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.