லிம்: அம்னோ “கறை படிந்த கிழவர்கள்” கட்சி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தமது புதல்வர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது அம்னோவின் அதிகாரத்துவ இணைய ஊடகத்தை சாடியுள்ளார்.

“நீண்ட முடி முதல் போதைப் பொருள் பிரச்னைகள் வரை குவான் எங் தமது வார்த்தைகளை சுழற்றுகிறார்” ( Dari Rambut Panjang ke Gejala Dadah, Guan Eng makin berputar) என்னும் தலைப்பில் அக்டோபர் 20ம் தேதி வெளியிட்ட “சிறப்பு” செய்தியை அந்த ஊடகம் மீட்டுக் கொள்வதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என அவர் கோரினார். அந்த இணையத் தளம் அதனைச் செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மருட்டினார்.

“என் குடும்பத்துடனும் புதல்வருடனும் விவாதித்த பின்னர், நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை நாங்கள் மிகவும் தயக்கத்துடன் முடிவு செய்தோம்,” என லிம் சொன்னார்.

“நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அந்தக் குண்டர்கள் எனது இளம் புதல்வனுடைய தோற்றத்துக்குத் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்துவர். தார்மீக ரீதியில் வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கேட்க மறுக்கும் அந்தக் குண்டர்களையும் கோழைகளையும் எதிர்கொள்வதற்குப் போதுமான துணிச்சலைப் பெறத் தான் முயலுவதாக என் புதல்வர் கூறியுள்ளார்”, என்றும் லிம் குறிப்பிட்டார்.

அந்த அம்னோ இணைய ஊடகம் அந்தச் செய்தியை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்பதற்கு 48 மணி நேர அவகாசத்தை லிம் வழங்கினார். அது அவ்வாறு செய்யத் தவறினால் போலீசில் புகார் செய்யப்பட்டு மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பினாங்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

தமது புதல்வருடைய “தார்மீக விஷயம்” மீது தெளிவுபடுத்துமாறு பல தரப்புக்கள் அழுத்தம் கொடுத்த பின்னர் லிம், மக்களுடைய கண்களை மூடுவதற்கு முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அந்த ஊடகச் செய்தி குறிப்பிட்டது.

‘செக்ஸ் விஷயங்களில் மூழ்கியுள்ளது’

இதனிடையே அந்த அம்னோ இணைய ஊடகம், இளம் பிள்ளைகள் மீது கூட அவதூறு கூறும் அளவுக்கு “செக்ஸ் விஷயங்களில் பெரிதும் மூழ்கியுள்ள கட்சிக்கு சொந்தமான” வலைப்பதிவு என்றும் லிம் சாடினார்.

“என்னுடன் மோதுங்கள். ஆனால் என் புதல்வரை விட்டு விடுங்கள். என்னை வீழ்த்துங்கள். எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என் பிள்ளைகளை விட்டு விடுங்கள்,” என அவர் மிகவும் உருக்கமாகக் கூறினார்.

“நாங்கள் பிஎன் அரசியல்வாதிகளுடைய பிள்ளைகளை ஒரு போதும் தொட்டதில்லை,” என அவர் கூறிக் கொண்டார்.

பள்ளிக்கூடம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் ஆகியோர் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும் அந்த விஷயத்தை அம்னோ தொடர்ந்து பெரிதுபடுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.