உங்கள் கருத்து: டான்ஸ்ரீ, நீங்கள் சொல்வதுதான் “பெரிய தமாஷ்”

“ரஷிட் எதைவைத்துச் சொல்கிறார் தாம் இசி தலைவராக இருந்தபோது தேர்தல் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று? பலரும், சாமான்யரும்கூட அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்களே.”

முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது ‘பெரிய தமாஷ்’

பெர்ட் டான்: தலைவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு அல்லது அரசாங்கத்தில் பணி புரியாதபோது, அல்லது சுதந்திரமாக செயல்படும் பொதுஅமைப்புகளில் பணிபுரியும்போது மட்டும் தர்க்க ரீதியாகவும் உண்மைகளைப் பேசுவதும் ஒரு வழக்கமாகி விட்டது.

அதிகாரத்தில் இருந்தபோது இல்லாதிருந்த ‘ஞானம்’ வயதான பின்னர் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விடுகிறது. அவர்கள் மட்டும் தங்கள் கடமையை நியாயமாக செய்திருப்பார்களானால் என்றோ பொதுமக்களின் மதிப்பைப் பெற்றிருப்பார்கள்.

இவருக்காவது மனச்சாட்சி இருக்கிறது. பலருக்கு-அண்மையில் பெர்காசாவில் சேர்ந்தவர்களே அவர்களைப் போன்றவர்கள்- அது இல்லவே இல்லை.திருந்தாத ஜன்மங்கள்.

யாப்: அப்துல் ரஷிட் அவர்களே! இசி ஒரு சுயேச்சை அமைப்புத்தானே?. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டிய அது, அழியா மையின் பயனீட்டை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லையே.

எனவேதான், இசி ஆளும் கட்சியின் கருவியாக செயல்படுகிறது என்று மக்கள் கருதுகிறார்கள். அதை நீங்கள் குறைசொல்ல முடியாது.

டூட்:  ‘நல்லவர்கள்’, ‘அதிகாரத்தில் இருந்தபோது நல்லது செய்யவே நினைத்தவர்கள்’, ‘மாற்றங்களைச் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாது போய்விட்டது’ என்றெல்லாம் பணி ஓய்வுபெற்ற பின்னர் இவர்கள் புலம்புவது ஏன்? சோறுதான் குழைந்துபோய் கஞ்சியாகி விட்டதே.

ஒபா: எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2008 மார்ச் பொதுத்தேர்தல் முடிவுகளை அப்துல் ரஷிட் அதிகாலை நேரத்தில் டிவி3-இல் அறிவித்துக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் களைப்பும் ஆத்திரமும் தெரிந்தது. பிஎன் வெற்றி பெற்றது எனச் சுருக்கமாக ஓர் அறிவிப்பை மட்டும் செய்தார்.

ஒரு நிருபர், மேலும் விவரங்கள் கூறுமாறு கேட்டுக்கொள்ள அவர்மீது எரிந்து விழுந்தார் ரஷிட். “தேர்தலின் முடிவுகளை விவரமாக அறிவிப்பது என் வேலை அல்ல.அரசாங்கம் வெற்றி பெற்றது என்று அறிவிப்பது மட்டுமே என் வேலை”, என்றார்.

அதை வேறுவகையில் சொல்லத்தான் அவர் நினைத்தார். ஆனால் அந்த ஒரு கணத்தில் மனத்தில் உள்ளதை வெளியில் கொட்டிவிட்டார். ஆம், அரசாங்கம் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். அதுதான் அவருடைய வேலை.

கேஜென்: அழியா மையைப் பயன்படுத்தும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது இசி தனித்துச் செயல்படவில்லை என்பதையும் ஆளும் கட்சியின் சொல்படிதான் நடந்துகொள்கிறது என்பதையும் காண்பிக்கிறது.தேர்தல்களைச் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த சுயேச்சையான ஓர் அமைப்பு இல்லாத நிலையில் நாம் ஒரு ஜனநாயக நாடு அல்ல.என்றும் நாம் ஒரு ஜனநாயக நாடாக இருந்ததும் இல்லை.

பரிதாபப்படுவோன்: எதையும் விளக்க வேண்டியதில்லை. உங்களுக்கு அழுத்தம் கொடுத்த கயவர்களை அடையாளம் காட்டுங்கள்.

மஞ்சிட்: ரஷிட் எதைவைத்துச் சொல்கிறார் தாம் இசி தலைவராக இருந்தபோது தேர்தல் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று? பலரும், சாமான்யரும்கூட அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்களே.

ரூபன்: புரொஜெக்ட் ஐசி-யும் வேறு பல அத்துமீறல்களும் அவரது பதவிக்காலத்தில்தான் நிகழ்ந்தன.

ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதாக நம்புகிறார். அதற்கு அடையாளமாக தொடர்ந்து பொதுத் தேர்தல்கள் நடந்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதை மறுக்கவில்லை.ஆனால், தேர்தல்கள் நியாயமாக, ஜனநாயக முறைப்படிதான் நடத்தப்பட்டனவா? 

நியாயவான்: கேள்விகளுக்கு, “கருத்துச் சொல்வதற்கில்லை”, “அறிந்திருக்கவில்லை அல்லது தகவல் இல்லை’ என்று ஒருவர் பதில் கூறுவாரானால் அவர் நம்பத்தக்கவர் அல்லர், எதையோ மறைக்கிறார் என்றுதான் பொருள்.

அவர் தம் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார், அவ்வளவுதான்.

TAGS: