2010ம் ஆண்டு நிர்வாகக் கோளாறு காரணமாக திரங்கானுவில் மூன்று மாவட்டங்கள், பள்ளிக்கூடச் சீருடைகளையும் புத்தகப் பைகளையும் விநியோகம் செய்யவில்லை என்பதை தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டு பிடித்துள்ளது.
மாராங், டுங்குன், செத்தியூ ஆகியவை அந்த மூன்று மாவட்டங்களாகும். அந்த மாநிலத்தில் உள்ள மற்ற நான்கு மாவட்டங்களிலும் 53,000 ஜோடி சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மூன்று மாவட்டங்களில் ஏன் அந்தச் சீருடைகள் வழங்கப்படவில்லை என்பதற்கு சம்பந்தப்பட்ட துறை உருப்படியான விளக்கத்தைத் தரவில்லை என 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக சில மாவட்டங்களில் 42,684 ஜோடி சீருடைகள் பள்ளித் தவணைக் காலம் தொடங்கும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வழங்கப்படுவதற்குப் பதில் மே மாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது இன்னும் கடுமையான விஷயம் ஆகும்.
அத்துடன் விநியோகம் செய்யப்படாமல் சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த சீருடைகளையும் புத்தகப் பைகளையும் கரையான்கள் அரித்துள்ளது அதை விட மோசமானதாகும்.
திரங்கானு மீதான 2010ம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் மாநிலச் செயலாளர் அலுவலகம் பற்றிய பிரிவில் அந்த விவரங்கள் காணப்படுகின்றன.
திரங்கானுவில் மாதம் ஒன்றுக்கு 1200 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தை கொண்ட குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளுக்கு உதவி வழங்கப்படுகிறது.
திரங்கானு அரசின் அத்தகைய நடவடிக்கையைப் பாராட்டிய அந்த அறிக்கை, 2006ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் ஏழ்மை நிலையில் உள்ள 55,000 முதல் 90,000 வரையிலான பள்ளிப் பிள்ளைகள் அதன் மூலம் பயன் அடைந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. என்றாலும் அந்தத் திட்டத்தில் பல பலவீனங்கள் காணப்பட்டன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.