ஐ.நா. பொதுச் செயலாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக உள்ள பான் கீ மூனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து, இரண்டு முறை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குத் தகுதியான ஒரு நபரின் பெயர், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சார்பில் முன்மொழியப்படும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபையின் இடைக்காலக் குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பக்வந்த் பிஷ்ணோய் பேசியதாவது:
தற்போதுள்ள உலக சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. எனவே ஐ.நா. பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொறுப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்களது பெயர்களை பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும்.
பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-http://www.dinamani.com