“அந்நிய வாக்காளர்கள்” பற்றி அரசு பிஎஸ்சிக்கு விளக்கும்

அரசாங்கம், வாக்குகள் பெறுவதற்காக அந்நியர்களுக்கு குடியுரிமை  வழங்குவதாகக் குறைகூறப்படுவது குறித்து தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)விடம் விளக்கமளிக்கும்.

நவம்பர் 2-இல் நடக்கும் ஒரு கூட்டத்தில் அது பற்றி பிஎஸ்சி-இடம் விரிவாக விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹராபான் அறிவித்துள்ளது.

“அவ்விசயத்தில் உள்துறை அமைச்சு பிஎஸ்சியுடன் ஒத்துழைக்கும். வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உள்துறை அமைச்சுக்கும் உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்றாரவர்.

2007-இலிருந்து 2011 ஆகஸ்ட்வரை 27,719 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஹிஷாமுடின் தெரிவித்தார்.

ஆனால், பாஸ், அரசாங்கத்தில் சில ‘தரப்புகள்’  அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குகள் பெறும் நோக்கத்துடன் அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் பாங்கியில் உள்ள ஒரு ஓய்வுத்தலத்தில் சுமார் 240 அந்நியர்களை எதிர்கொள்ள முயன்ற பாஸ், அங்கு அவர்களுக்குக் குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறிக்கொண்டது.

சிலாங்கூரில் அது திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது, சாபாவின் புரோஜெக்ட் ஐசி திட்டம்போல என்று அந்த இஸ்லாமியக் கட்சி தெரிவித்தது.

TAGS: