தென் கொரியா: அமெரிக்கத் தூதர் மீது கத்தி வீச்சு

  • முகத்திலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மார்க் லிப்பெர்ட்.

    முகத்திலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மார்க் லிப்பெர்ட்.

தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர் மார்க் லிப்பெர்ட் (42), தலைநகர் சியோலில் கத்தியால் தாக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிம் கீஜோங் என்ற 55 வயது நபர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் பின்னர் தெரிய வந்தது.

கொரியப் பிரிவினைக்கு எதிராகவும், ஒன்றுபட்ட கொரியாவை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு அவர் இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சியொன்றில் மார்க் லிப்பெர்ட் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில், லிப்பெர்டின் கன்னத்திலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உதவி செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது:

தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர் மார்க் லிப்பெர்ட் மீது வியாழக்கிழமை காலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அந்த வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

காயமடைந்த மார்க் லிப்பெர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்றார் அவர்.

80 தையல்கள்: இதனிடையே, 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து மார்க் லிப்பெர்ட்டின் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது முகத்தில் 80 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவை கூறின.

-http://www.dinamani.com