அசீஸ் பேரிக்கு ஆதரவாக இடுகையிட்ட மாணவரிடம் யுஐடிஎம் விசாரணை

யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்), தம் மாணவர் ஒருவர் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரியை இடைநீக்கம் செய்த யுனிவர்சிடி- இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ)-வைத் தம் லலைத்தளத்தில் கடுமையாக சாடி எழுதியதைக் கட்டாயப்படுத்தி அகற்றச் செய்துள்ளது.

அப்துல் அசீசை பணி இடைநீக்கம் செய்த யுஐஏ-யைச் சாடுவதற்கு “தரமற்ற” சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த இடுகையை அகற்றுமாறு கேட்டுக்கொண்டதாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தான், பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில், இஸ்மாலிய விவகாரத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து கருத்துரைத்ததற்காக அப்துல் அசீஸ் கடந்த வாரம் யுஐஏ-ஆல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், அந்த இடைநீக்கம் ரத்துச் செய்யப்பட்டது என்றாலும் அவர்மீது அரசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அப்துல் அசீசின் இடைநீக்கத்துக்குக் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களும் மாணவர் தலைவர்களும் அதைக் குறைகூறினர். அதன் தொடர்பில் யுஐஏ மாணவர்கள் இரண்டு தடவை ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

நேற்று, யுஐடிஎம் மாணவர் விவகாரத்துறை துணை முனைவர்,தம்மை வந்து பார்க்குமாறு மாணவர் காலிட் முகம்மட் இஸ்மத்துக்கு சொல்லி அனுப்பியதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

துணை முனைவரைச் சந்தித்த அவரிடம், அப்துல் அசீஸ் விவகாரம் பற்றி எழுதுவதையும் யுஐஏ-யைச் சாடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ‘அறிவுரை’ கூறப்பட்டிருக்கிறது.

முதலாமாண்டு மாணவரான காலிட், சுயேச்சை மாணவர் சேவைக் குழு என்ற அமைப்பின் துணைத்தலைவருமாவார்.

காலிட் தம் வலைப்பதிவில், அப்துல் அசீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறைகூறியதுடன் அதற்கு எதிராக மற்ற இடங்களில் உள்ள மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என அவ்வட்டாரம் மேலும் கூறியது.

மாணவர் விவகாரத் துறை சந்திப்பின் விளைவாக வலைப்பதிவில் உள்ள இடுகையை அகற்ற காலிட் உடன்பட்டிருக்கிறார்.

TAGS: