“நஜிப்பைத் தடம் புரளச் செய்வதற்கு முன்னாள் ஐஜிபி இனத் தீவிரவாத இயக்கத்திற்கு வித்திடுகிறார்

முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மனித உரிமை இயக்கத்தை கம்யூனிசத்திற்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியிருக்கிறார்.

“மனித உரிமைகளை கம்யூனிசத்திற்கு இணையானது என்றால் இரண்டாவது பெர்க்காசா பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து ரஹிம் ஆற்றிய உரை உண்மையில் மலேசியாவில் இன தீவிரவாதத்திற்கு வித்திட்டு அதனை வளர்ப்பதற்கு ஒப்பாகும்”, என அவர் புவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“மனித உரிமை அலை” சமூக ஒப்பந்தத்தை கீழறுப்புச் செய்யக் கூடும் என்பதால்  “கம்யூனிச அலைக்கு” எதிராக மலாய்க்காரர்கள் ஒன்றுபட்டது போல அதற்கு எதிராக இப்போதும் ஒன்றுபட வேண்டும் என கடந்த புதன் கிழமை மலாய்க்காரர்களை ரஹிம் கேட்டுக் கொண்டார்.

அது இன தீவிரவாதத்திற்கு (fascism)இணையாகும் எனக் குறிப்பிட்ட புவா, fascism என்னும் சொல்- “ஒரு தேசிய அல்லது இன வம்சாவளியின் மேலாண்மை மீதான நம்பிக்கை, ஜனநாயகத்தை அவமதிப்பது” என ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுவதாக சொன்னார்.

‘நஜிப்பின் சீர்திருத்தங்களை ரஹிம் கீழறுப்புச் செய்கிறார்’

“வலச்சாரிப் போக்குடைய பெர்க்காசா பேரவையில் ரஹிம் நிகழ்த்திய உரையும் மற்ற விவாதங்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன் வைத்துள்ள சீர்திருத்தங்களைத் தடம் புரளச் செய்வதற்கு அந்த அமைப்பு மேற்கொள்கின்ற இரண்டாவது முயற்சி,” என்றும் புவா வருணித்தார்.

கொடூரமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், பல அவசர காலச் சட்டங்கள் ஆகியவற்றை  ரத்துச் செய்வது உட்பட மனித உரிமைகளுக்குக் கூடுதல் இடமளிக்கும் பொருட்டு பல சீர்திருத்தங்களை நஜிப் மலேசிய தினத்திற்கு முதல் நாள் அறிவித்தார்.

இன அடிப்படையிலான ஆதரவு நடவடிக்கைகளை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய பொருளாதார வடிவத்தை பிரதமர் மாற்றுவதற்கு பெர்க்காசா அழுத்தம் கொடுத்தது முதலாவதாகும் என புவா குறிப்பிட்டார்.

நஜிப் “உடனடியாக அந்த இனத் தீவிரவாத இயக்கத்தைத் தடுக்க வேண்டும். மனித உரிமை இயக்கத்தை கம்யூனிசத்திற்கு ஒப்பிடும் ரஹிமையும் பெர்க்காசாவையும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் சீர்திருத்தங்கள் மீது உண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் மனித உரிமைகளுக்கான போராட்டத்துக்கும் நஜிப் முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி -யுமான புவா கோரினார்.

இல்லை என்றால் “அரசியல் உருமாற்றத் திட்டத்தை” சூழ்ந்துள்ள நடப்பு பரபரப்பு, புதிய பொருளாதார வடிவத்தைப் போன்று வெறும் “சோதனை பலூனாக” வெடிக்கக் கூடும். அந்த சூழலில் வாக்குறுதி அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றாக மோசமான கொடூரமான சட்டங்கள் இயற்றப்படலாம் என்றும் புவா அச்சம் தெரிவித்தார்.