பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளைஞனை காப்பாற்றாமல் மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள கவெண்ட்ரி(Coventry) என்ற நகரில் அன்னையர் தின ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வந்துள்ளன.
கவெண்ட்ரி நகரில் உள்ள ஒரு பிரபல இரவு விடுதி ஒன்றில் கேளிக்கை விருந்திற்காக இரண்டு இளம்பெண்கள் உள்பட இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்கிடையே விவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இந்த எதிர்பாராத மோதலில் நண்பர்களில் ஒருவன் மற்றொரு இளைஞனை(18) சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளான்.
ஆனால், விடுதியில் இருந்த நபர்கள் அந்த இளைஞனை காப்பாற்றாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை தங்களது கைப்பேசி மூலம் படம் பிடித்து ஸ்நாப்சாட், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்த அவசர ஊர்தியில் அந்த இளைஞன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வழியில் முதலுதவி அளிக்க முயற்சித்தபோது அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அந்த இளைஞன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த இளைஞனுடன் வந்திருந்த இரண்டு பெண்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிருக்கு போராடிய இளைஞனை காப்பாற்றாமல் அவரை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவேற்றம் செய்த நபர்களை கண்டித்து ’ஹேஸ்டேக்குகளை’ உருவாக்கி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அன்னையர் தினம் கொண்டாடும் நேரத்தில் விடுதியில் நடைபெற்ற கொலையை குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://world.lankasri.com