ஜெர்மனி விமான விபத்துக்கு காரணம் துணை விமானி?

germanswingபிரான்ஸ் மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்த விமானத்தின் துணை விமானிதான் அந்த விபத்துக்குக் காரணம் என்று அது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி கூறினார்.

“ஜெர்மன்விங்ஸ்’ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம், ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து, ஜெர்மனியின் டுஸல்டாஃர்ப் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.

அந்த விமானத்தில் 144 பயணிகள், விமானிகள் உள்பட 6 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், ஃபிரான்ஸில் மலைப் பகுதியில் அது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

அந்த விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள், விமானிகளின் உரையாடல் அடங்கிய கருப்புப் பெட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அதிலிருந்து கிடைத்த விவரங்கள் குறித்து விபத்தை விசாரித்து வரும் பிரைஸ் ராபின் வியாழக்கிழமை கூறியதாவது:

கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களின் முதல் கட்ட ஆய்வில், அந்த விமானத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துணை விமானி கடைசி நிமிடங்களில் அதனை வேகமாகக் கீழே நோக்கிச் செலுத்தியுள்ளார் எனத் தெரிகிறது.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து மூத்த விமானி வெளியே சென்றபோது, துணை விமானி தனியாக விமானத்தைச் செலுத்தி வந்தார்.

மூத்த விமானி கழிப்பறைக்குச் சென்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. ஆனால் அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் திரும்பியபோது அது உள்புறம் தாளிடப்பட்டிருந்தது.

அவர் கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது. மேலும் விமானத்தின் எச்சரிக்கை மணி ஒலிப்பது பதிவாகியுள்ளது. கதவு திறக்காததைத் தொடர்ந்து, அவர் வேகமாகக் கதவைத் தட்டுவது கேட்கிறது. ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, இயல்பாகப் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து விமானம் கீழே இறங்கத் தொடங்குகிறது.

இதிலிருந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்த துணை விமானி, வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கும் விதத்தில் விமானத்தைச் செலுத்தினார் எனத் தெரிகிறது. அவரது நோக்கத்தின் பின்னணி உடனடியாகத் தெரியவில்லை என்று விசாரணை அதிகாரி பிரைஸ் ராபின் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-http://www.dinamani.com