யேமனில் இரண்டாவது நாளாக சவூதி அரேபியா குண்டு வீச்சு

yemenயேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 39 பேர் உயிரிழந்ததாக யேமனில் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா வியாழக்கிழமை வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

மேலும், யேமன் அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதியின் அரசை மீண்டும் ஏற்படுத்துவற்காக, ஐந்து வளைகுடா நாடுகள் உள்பட 10 பிராந்திய நாடுகளின் கூட்டணியை அமைத்துள்ளதாக அந்த நாடு தெரிவித்தது.

இந்தக் கூட்டணிக்கு உளவுத் தகவல்கள் உள்ளிட்ட உதவிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்ததாக அமெரிக்காவுக்கான சவூதி அரேபியத் தூதர் அதெல் அல்-ஜுபேர் கூறினார்.

இந்த நிலையில், தலைநகர் சனாவுக்கு வடக்கே உள்ள ராணுவ மையத்தின் மீது சவூதி அரேபிய விமானம் வியாழக்கிழமை வீசிய குண்டு, குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 12 பேர் உயரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 27 பேர் உயிரிழந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்திய சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தாக்குதலைத் தொடர்ந்தனர்.

யேமன் அதிபர் சவூதியில் தஞ்சம்

யேமனின் அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதி சவூதி அரேபியா நாட்டில் அவர் தஞ்சம் புகுந்தார்.

தலைநகர் சனாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதிலிருந்து அபெத் ரப்போ ஏடன் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஏடன் நகரையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்து முன்னேறியதையடுத்து, அங்கிருந்து ஓமன் நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

வியாழக்கிழமை ரியாத் விமான நிலையம் வந்திறங்கிய அவரை சவூதி பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் வரவேற்றார் (படம்).

-http://www.dinamani.com