ஏமனில் விடிய விடிய குண்டுமழை பொழிந்ததால், பொதுமக்கள் பயத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
ஏமன் அரசை எதிர்த்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ஏமன் அதிபர் நாட்டிலிருந்து வெளியேறி சவுதியில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் தலைநகர் சனா பகுதியில் வான்வழித் தாக்குதல் இரவு நேரங்களில் நடத்தப் படுவதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வான்வழித் தாக்குதல் நடத்திய போர் விமானங்கள் சவுதியைச் சேர்ந்ததா அல்லது ஷியா பிரிவின் ஹவுதி படையினருடையதா என்று தெரியாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
முதல் நாள் தாக்குதலில் பலியானதாக அறிவிக்கப்பட்ட 39 பொதுமக்களில் 6 பேர் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-http://world.lankasri.com