மனித உரிமைகள் மலேசியாவுக்கு ஒரு மருட்டல் என முன்னாள் ஐஜிபி கூறுவதை முன்னாள் மனித உரிமை ஆணையர் சங்கம் (புரோஹாம்)வன்மையாகக் கண்டித்துள்ளது.
“மலேசியாவில் மனித உரிமைகளுக்கு போராடுகின்றவர்களை கூட்டரசு அரசியலமைப்பு உணர்வுகளை உண்மையில் பாதுகாக்கின்றவர்களாக கருதப்பட வேண்டுமே தவிர ரஹிம் நூர் (முன்னாள் ஐஜிபி) கூறுவது போல மருட்டலாக அல்ல,” என அந்த சங்கம் விடுத்த அறிக்கை கூறியது.
கடந்த புதன் கிழமை, பெர்க்காசா அமைப்பின் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து அப்துல் ரஹிம் ஆற்றிய உரையை புரோஹாம் ‘மிக்க கவலையோடு’ கவனித்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
‘மனித உரிமை அலை’ புதிய சமயத்துக்கு இணையானது என்றும் மலேசியாவில் கடந்த காலத்தில் வீசிய கம்யூனிச ‘அலையை’ போன்றது என்றும் அந்த முன்னாள் ஐஜிபி வருணித்துள்ளார்.
“அந்த மனித உரிமை அலை நாட்டு தோற்றுவிக்கப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கே மருட்டலாக” விளங்குவதாகவும் அப்துல் ரஹிம் சொன்னார்.
தாம் எண்ணுவதைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருப்பதை ஏற்றுக் கொண்ட புரோஹாம் அவரது நிலையை வன்மையாக நிராகரித்தது.
“1957ம் ஆண்டு மலாயாவையும் 1963ம் ஆண்டு மலேசியாவையும் தோற்றுவித்தவர்கள் மனித உரிமைகளுக்கு தெளிவான கடப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பின் 5வது முதல் 13வது பிரிவு வரையில் அதனைக் காண முடியும். சம நிலை, பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவது, இணைவது, சமயச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அந்தப் பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.”
அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சில சட்டங்களை மறு ஆய்வு செய்வதின் வழி மனித உரிமை நடைமுறைகளுக்கு மலேசியாவை உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளதையும் அது சுட்டிக் காட்டியது.
அந்த அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும் போது ” மனித உரிமை இயக்கம் நாட்டுக்கு மருட்டலாக விளங்கும் புதிய அலை அல்ல. மாறாக நம் நாட்டின் நிலைக்களனாகும்,” என புரோஹாம் குறிப்பிட்டது.
உரிமைகள் அமைப்புக்கள் “அச்சமடைந்துள்ளன”
இதனிடையே முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நூர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து விடுதலைக்கான வழக்குரைஞர்கள் என்னும் மனித உரிமை அமைப்பு ‘அச்சம்’ அடைந்துள்ளது.
ரஹிம் நூர், மகாதீர் கருத்துக்கள் நம் நாட்டுக்கு பெரிய அவமானத்தைத் தந்துள்ளது,” என்றும் அந்த அமைப்பு கூறியது.
அப்துல் ரஹிம் கருத்துக்கள் தனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர் ஐஜிபி-யாக இருந்த காலத்தில் அவரது உத்தரவுக்கு இணங்க மனித உரிமை அத்துமீறல்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன,” என அது குறிப்பிட்டது.
“சரியான சிந்தனை உள்ளவர்கள் மனித உரிமை அலையை கம்யூனிசத்துக்கு ஒப்பிட மாட்டார்கள்.”
மகாதீரும் தாம் பிரதமராக இருந்த காலத்தில் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளார். 1987ம் ஆண்டு நடத்தப்பட்ட லாலாங் நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டதும் போலீசாரின் முரட்டுத்தனம் அளவுக்கு அதிகமாக இருந்ததும் அதற்கு சான்றுகளாகும் என்றும் அந்த அமைப்பு கூறியது.