சோவியத் சின்னங்களுக்குத் தடை: உக்ரைனுக்கு ரஷியா கண்டனம்

Ethnolingusitic_map_of_ukraineசோவியத் காலச் சின்னங்களுக்குத் தடை விதித்ததன் மூலம் உக்ரைன் சர்வாதிகாரப் போக்கைக் கையாள்வதாக ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வாதிகாரப் போக்குடன் ரஷிய சின்னங்களுக்குத் தடை விதித்து, மக்களின் எழுத்து சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் உக்ரைன் அரசு பறித்துள்ளது.

இதுதொடர்பாக உக்ரைன் அரசு இயற்றியுள்ள சட்டம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும். தேசிய இனவாதத்தைத் தூண்டும்.

அந்தச் சட்டத்தில், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் கைகோத்து செயல்பட்ட உக்ரைன் தேசியப் படையினரை “தேச பக்தர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரலாற்றைத் திரித்துக் கூறி, லட்சக்கணக்கான போர்த் தியாகிகளுக்கு உக்ரைன் அரசு துரோகம் இழைத்துள்ளது என ரஷியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாஜிக்களின் ஆக்கிரமிப்பையும், சோவியத் ஆட்சிக் காலத்தையும் நினைவுபடுத்தும் சின்னங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் மசோதா, உக்ரைன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாஜிக்களின் கொடூரம், சோவியத் ஆக்கிரமிப்பு ஆகிய வரலாற்றுக் களங்கங்களில் இருந்து உக்ரைனை மீட்கவே இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக அதன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்ப்பு அதிகமின்றி நாடாளுமன்றத்தில் எளிதில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, உடனடியாக சட்டமாக்கப்பட்டது.

அந்தச் சட்டத்தில் “தேச பக்தர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள உக்ரைன் தேசியப் படையினர், 2-ஆம் உலகப் போரின்போது நாட்டை ஆக்கிரமித்த நாஜிக்களுடன் தொடக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.

எனினும், விரைவிலேயே நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியன் ஆகிய இரு தரப்பையும் எதிர்த்து அந்தப் படையினர் கொரில்லா போரில் ஈடுபட்டனர்.

-http://www.dinamani.com