சிரியாவில் ராணுவ விமான தளத்தைக் கைப்பற்ற முயன்ற இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்ததாவது:
சுவைதா மாகாணம், கல்கலா அருகில் அமைந்துள்ள ராணுவ விமான தளத்தைக் கைப்பற்ற இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவ விமான தளம் முற்றிலும் அரசுக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று அந்த மையம் தெரிவித்தது.
-http://www.dinamani.com