“அமெரிக்கா, கியூபா உறவுகளில் புதிய சகாப்தம்’

  • அமெரிக்க நாடுகள் மாநாட்டின்போது நேரடிப் பேச்சு நடத்தும் முன்னர் கைகுலுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ.

    அமெரிக்க நாடுகள் மாநாட்டின்போது நேரடிப் பேச்சு நடத்தும் முன்னர் கைகுலுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ.

அமெரிக்கா, கியூபா நாடுகளிடையேயான உறவுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

வட, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் 2 நாள் மாநாடு பனாமா தலைநகர் பனாமா சிட்டியில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

இதற்கு முந்தைய மாநாடுகளைவிட இந்த ஆண்டு நிகழ்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது. அமெரிக்கா- கியூபா இடையே உறவுகள் மீண்டும் மலரும் சூழ்நிலையில் மாநாடு நடைபெற்றது.

இறுதி உரைகள் நிகழ்த்துவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஒபமாவும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நேரில் சந்தித்துப் பேசியது சர்வதேச கவனத்தைப் பெற்றது.

தனது மாநாட்டு உரையில் ஒபாமா பேசியதாவது: அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தப் பிராந்தியத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும். கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நானும் ஒரே மேடையில் இருப்பதே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்கா, கியூபா இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன என்பதை அதிபர் காஸ்ட்ரோவும் ஒப்புக் கொள்வார். எனினும், இரு நாடுகளிடையிலான உறவுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்பது உண்மை என்றார்.

ஒபாமா நாணயமானவர்

மாநாட்டு உரையில் ராவுல் காஸ்ட்ரோ பேசியதாவது:

கியூபா புரட்சியைப் பற்றிப் பேசும்போது நான் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். புரட்சிக்குப் பிறகு கியூபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அப்போது ஒபாமா பிறந்திருக்கவில்லை. இன்றைய நிலைக்கு அவர் பொறுப்பாக முடியாது. அவருடைய இரு சுயசரிதைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவர் நாணயமானவர். தனது வேர்களை மறக்காதவர்.

கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க நாடாளுமன்றம் நீக்க வேண்டும் என காஸ்ட்ரோ கூறினார்.

அமெரிக்க நாடுகளிடையேயான இந்த மாநாடு ஏழாவது முறையாக நடைபெற்றது. முந்தைய மாநாடுகளில் கியூபா கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு மாநாட்டில் முதல் முறையாக கியூபா கலந்து கொள்வதால், உரையாற்றுவதற்குத் தனக்கு கூடுதல் நேரம் அளிக்க வேண்டும் என்று ராவுல் காஸ்ட்ரோ கூறினார்.

“ஒவ்வொரு தலைவருக்கும் 8 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு 6 முறை நான் பேச முடியவில்லை. எனவே, இப்போது 48 நிமிடங்கள் கூடுதலாகப் பேச அனுமதிக்க வேண்டும்’ என்று அவர் கூறியதும் மாநாட்டு அரங்கு கலகலப்பாகியது. வெனிசூலா அதிபர் நிக்கலஸ் மதுரோ உரையாற்றுகையில், பல வெளிநாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் அமெரிக்காவின் தலையீடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஒபாமா அதற்கு பதிலளிக்கும் வகையில், ஒவ்வொரு முறையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்போதும் எனக்கு வரலாற்றுப் பாடம் நடத்தப்படுகிறது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

-http://www.dinamani.com