எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில், பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அன்ஸார் பெய்ட் அல்-மக்திஸ் அமைப்பு இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த ஷேக் ஜவாயத் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ கவச வாகனத்தின் மீது சாலையோர வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 6 ராணுவத்தினர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
அதற்கு சில மணி நேரங்கள் கழித்து, மாகாணத் தலைநகர் அல்-அரிஷ் நகரிலுள்ள காவல் நிலையத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இதில் 5 போலீஸார் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.
காவல் நிலையத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. அருகிலுள்ள கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாயின.
சினாய் பகுதியைச் சேர்ந்த அன்ஸார் பெய்ட் அல்-மக்திஸ் அமைப்பு, “இஸ்லாமிய தேசம்’ அமைப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததிலிருந்து தனது பெயரை “சினாய் மாகாணம்’ என மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-www.dinamani.com