ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அடிமைகளாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு 250 பள்ளி மாணவிகளை கடத்தினர். நேற்றுடன் ஓராண்டு முடிந்ததும் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிய வில்லை.
இந்த நிலையில் ஐ.நா.வின் ‘யூனிசெப்’ குழந்தைகள் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 8 லட்சம் குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து அகதிகளாகியுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல சிறுமிகள் கடத்தப்பட்டு ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். பலருக்கு கட்டாய திருமணமும் நடத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களை தங்களது தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து ஆயுத பயிற்சி அளித்து வருகின்றனர். சுமார் 1 கோடி குழந்தைகள் தொடக்க கல்வி பயில முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.’’ என்று கூறப்பட்டுள்ளது.
-http://www.maalaimalar.com