உக்ரைன் போர் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது

Ethnolingusitic_map_of_ukraineகிழக்கு உக்ரைனில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படாததைத் தொடர்ந்து, புதிய அமைதிப் பேச்சுவார்த்தை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திங்கள்கிழமை தொடங்கியது.

உக்ரைன், ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் நகரிலும் வேறு பல இடங்களிலும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் ரஷிய ஆதரவுக் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது. 6 வீரர்கள் காயமடைந்தனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டொனெட்ஸ்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. 1,166 குண்டு வீச்சுகள் நடைபெற்றுள்ளன.

மின்ஸ்க் ஒப்பந்தப்படி கன ரக ஆயுதங்களை இரு தரப்பினரும் சண்டைப் பகுதியிலிருந்து அகற்றிவிட்டதாகக் கூறினாலும், குண்டு வீசுவதற்கு 100 மி.மீ. பீரங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று சர்வதேசப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்ந்து கன ரக ஆயுதங்களும் வீரர்களும் அளித்து உதவி வருவதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பேச்சு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் -பிராங்க் வால்டர் ஸ்டைன்மையர் கூறியதவாது:

கிழக்கு உக்ரைனில் பதற்ற நிலை நீடிக்கிறது. பெர்லினில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை மூலம் அங்கு அமைதி நிலையை உறுதி செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.

அதே வேளையில், பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

நான்கு செயல் திட்டங்களை மேற்பார்வையிட தனிக் குழுக்கள் அமைப்பதென அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

பாதுகாப்பு விவகாரங்களை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்படும். கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது, போர் கைதிகளை ஒப்படைப்பது, ஓராண்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைவது ஆகியவை தொடர்பாக தனித் தனி குழுக்கள் அமைக்கப்படும்.

சண்டைப் பகுதிகளிலிருந்து வெளியேறாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து தற்போதைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ùஸர்கேய் லாவ்ரோவ் கூறுகையில், ராணுவ விவகாரங்களில் மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதார, மனிதாபிமான அடிப்படையிலும் கிழக்கு உக்ரைன் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.

ஏற்கெனவே கிரீமியா பகுதியை இணைத்துக் கொண்டதால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் விதித்துள்ளன.

இந்நிலையில் கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வரும் ராணுவப் பொருளுதவி ரஷியாவை மேலும் மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. உக்ரைனில் மறைமுகத் தலையீடு தொடரும் வரை, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் என்பது மட்டுமல்லாமல், அவை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று சில ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அந்த வகையில் பெர்லின் பேச்சுவார்த்தைகள் ரஷியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் சண்டையில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ஐ.நா. தெரிவித்தது.

-http://www.dinamani.com