ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 700 பேர் மூழ்கியதை ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் படுகொலையோடு ஒப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கார்லோட்டா சமி கூறுகையில், “”மத்திய தரைக்கடலில் இதுவரை கண்டிராத மாபெரும் படுகொலையை நாம் தற்போது கண்டுள்ளோம்” என்றார்.
மேலும், அந்த அமைப்பின் தலைவர் ஆன்டனியோ கியூட்ரெஸ் கூறியதாவது:
அகதிகளை நடுக்கடலில் மீட்பதற்கான ஏற்பாடுகளை பன்மடங்கு பெருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்கள் ஐரோப்பா வருவதற்கு நம்பத்தகுந்த, சட்டப்பூர்வ வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த விபத்து உணர்த்தியிருக்கிறது.
இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் பாதுகாப்புக்காக வரும் அகதிகள் பரிதாபகரமாக உயிரிழப்பது தொடர்கதையாகிவிடும் என்றார் அவர்.
“மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு’: இந்த விபத்து குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியதாவது: மாபெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து, முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஒன்றே. எனினும், விபத்தைத் தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, 700 பேர் கடலுக்குள் மூழ்கிய சம்பவம் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவே ஆகும் என்று அந்த அமைப்பு கருத்து தெரிவித்தது.
“இனியும் தாமதிக்க முடியாது’: ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஃபெடரிகா மோகேரினி கூறியதாவது:
“இனி இதுபோல் ஒரு விபத்து நிகழக் கூடாது’ என நாம் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் விபத்துகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, இனியும் தாமதிக்காமல், இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஐரோப்பிய யூனியன் உடனடியாக இறங்குவதற்கான நேரம் இது என்றார் அவர்.
ஊடகங்கள் குற்றச்சாட்டு: இந்த விபத்தைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய யூனியன் அமைப்பின் மீது பல்வேறு ஊடகங்களும் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தச் சம்பவத்தை “ஐரோப்பிய யூனியனின் கருப்பு தினம்’ என்று ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
“உயிர்களை துச்சமாக மதிக்கும் ஐரோப்பிய யூனியனின் அகதிகள் குறித்த இரக்கமற்ற கொள்கைகளை இந்த விபத்து துகிலுரித்துக் காட்டுகிறது’ என்று அவை குறிப்பிட்டுள்ளன. ஒரு சில பத்திரிகைகள், அகதிகளைத் தேடவும், மீட்கவும் இத்தாலி மேற்கொண்டு வந்த “மாரே நாஸ்டிரம்’ நடவடிக்கையை அந்த நாடு மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அதிக செலவு பிடிப்பதாலும், ஐரோப்பாவை நோக்கி மேலும் பல அகதிகளை இந்த நடவடிக்கை ஈர்க்கும் என ஐரோப்பிய யூனியன் விமர்சித்ததாலும் “மாரே நாஸ்டிரம்’ நடவடிக்கையை இத்தாலி நிறுத்தி வைத்துள்ளது.
-http://www.dinamani.com


























கவனியுங்கள் இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்த நாட்டு பாஸ்போர்ட் உடன் நுழைய முடியாது இதனால் தான் குறுக்கு வழியில் வந்து உயிர் விடுகின்றார்கள் ….அனால் மலேசியா பாஸ்போர்ட் உடன் பல ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாம் …வந்து வேலை செயலாம் ….பணம் சேர்க்கலாம் …அடிதடியில் இறங்கும் ..சண்டையில் இறக்கும் மலேசியா தமிழர்கள் சிந்திக்க வேண்டியநேரம் …இத்தாலியில் வீடு வேலை செய்வது…முதியோர்களை கவனிப்பது போன்ற வேலைகளுக்கு வதிவிடம்..உணவு ..மருத்துவ செலவுகள் எல்லாம் முதலாளி பொறுப்பு மாதம் குறைந்து சம்பளம் 700 Euro கையில் வரும் ….ஸ்பெயின் நாட்டில் மரக்கறி தோட்டங்களில் வேலை உண்டு