தேர்தல் சீர்திருத்தம் மீது முன்னாள் இசி தலைவர் “வெளிச்சத்தை” காண்கிறார்

கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ‘தேர்தல் மனிதராக’ திகழ்ந்த  இசி என்ற  முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சூழ்நிலைகள் மாறியுள்ளதாகக் கருதுகிறார்.

2008ம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் இப்போது சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருப்பதாகவும் எண்ணுகிறார்.

ஈராயிரத்தாவது ஆண்டு இசி தலைவராக அவர் பொறுப்பேற்ற அவர் அதற்கு முன்னர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு அதன் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு காலத்தில் தேர்தல் சீர்திருத்தம் என வரும் போது பழமைப் போக்கைப் பின்பற்றிய தேசியத் தலைவர்கள் இப்போது “பெரிய மன மாற்றத்துடன்” காணப்படுவதாக அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் ஜனநாயகத் தேர்தல் நடத்தப்படும் முறை சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் நமது  தலைவர்களிடம் பெரிய மன மாற்றம் ஏற்பட்டுள்ளது.”

“அந்த விஷயங்கள் மீது நமது தலைவர்கள் கூறும் கருத்துக்கள், மலேசியாவில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி வருவதைக் காட்டுகிறது,” என்றார் அவர்.

அப்துல் ரஷிட் மின் அஞ்சல் வழி மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.

“அந்த அறிகுறிகள் நாட்டுக்கு புதிய கால கட்டத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது ஜனநாயகத்தை வலுப்படுத்த “85 ஆண்டுகளுக்கும் 256 ஆண்டுகளுக்கும் இடையிலான காலத்தை” எடுத்துக் கொண்டதுடன் ஒப்பிடுகையில் சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகளே நிறைந்துள்ள நம் நாட்டுக்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாகும்.”

“நாம் உருவாக்க காலத்தை கடந்து விட்டோம். இப்போது நான் ஜனநாயக நடைமுறைகளைப் பொறுத்த வரையில் மாற்றத்திற்கான காலத்துக்குள் நுழைந்துள்ளோம். நாம் மெதுவாகவும் செல்லவில்லை. தாமதமாகவும் நுழையவில்லை.”

“நமது ‘கட்டுப்படுத்தப்பட்ட’ ஜனநாயகத்துக்கு 54 ஆண்டுகளே முடிந்துள்ளது. நாம் சுரங்கப் பாதையின் விளிம்பில் வெளிச்சத்தைக் காணத் தொடங்கி விட்டோம்,” என்றார் அப்துல் ரஷிட்.

தாம் இசி செயலாளராக இருந்த போது நிலவிய சூழ்நிலையைக் காட்டிலும் நடப்பு நிலைமை மாறுபட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மலேசியர்கள் சாந்தமாக இருந்தனர்

அப்துல் ரஷிட், 2008ம் ஆண்டு தேர்தலில் கடைசி நேரத்தில் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்ட போது பொது மக்களிடம் எழுந்த ஆத்திரத்தை தாங்கிக் கொண்டவர் ஆவார்.

1980 களில் கூட மலேசியர்கள் ” அப்போதைய தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டனர். சாந்தமாக இருந்தனர். என்றார் அவர்.

வழக்குரைஞர்கள் கூட தேர்தல் சட்டங்கள் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. தங்களுக்கு “தேர்வு சுதந்திரம் மட்டுமின்றி ஒன்று கூடுவதற்கான சுதந்திரமும் இருப்பதாக” பெரும்பாலான மக்கள் அப்போது கருதினர்.

“மலேசியாவில் சுதந்திரம் பெற்ற நாள் முதல் தடை செய்யப்பட்ட மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் வளருவதற்கும் தேர்தல்களில் பங்கு கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டது நல்ல விஷயமாகும்.”

தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்து ‘போராட்டங்களுக்கு’ ஆதரவு அளிப்பதாகத் தோன்றிய அப்துல் ரஷிட், தேர்தல் சட்டங்களை குறிப்பாக சமநிலையாக இல்லாத சூழ்நிலைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் குறிப்பிட்டார். 

மறு ஆய்வு செய்யாவிட்டால் வெளியுலகம் உட்பட அதிகமான மக்கள் ‘இந்த நாட்டில் சட்டப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட நமது அரசாங்கம் குறித்தும் நாட்டில் பின்பற்றப்படுகிற சுதந்திரமான தேர்வு முறை குறித்தும்’ சந்தேகம் கொள்ளத் தொடங்கி விடுவர்.

மலேசியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படவில்லை என அப்துல் ரஷிட் கருதுவதாக அதற்கு அர்த்தமில்லை.

நாட்டின் 12 பொதுத் தேர்தல்களும் சட்டங்களுக்கு ஏற்ப முறையாக நடத்தப்பட்டுள்ளன  என்றும் அவர் சொன்னார்.

“எல்லாத் தேர்தல்களும் திறமையாக நடத்தப்பட்டு நம்பத்தகுந்த தேர்தல் தரம் சாதிக்கப்பட்டுள்ளது.”

“சட்ட அடிப்படையில் மலேசிய ஜனநாயகத் தேர்தல் நடைமுறையை மேலும் உயர்ந்த நிலைக்கு விரிவுபடுத்த நாடு முடிவு செய்தால் தேர்தல் ஆணையமும் இன்னும் நிறையச் செய்யத் தயாராக இருந்தது, இப்போதும் தயாராக இருக்கிறது என்பது பொது மக்கள் உணர வேண்டும்,” எனவும் அப்துல் ரஷிட் வலியுறுத்தினார்.

TAGS: