அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி: மீண்டும் பிரதமராக கமரூன்

cameron_003பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்தபடியாக தொழிற் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக 232ஆசனங்களைப் பெற்றுத் தெரிவாகியது. இதுவரை வெளியான 646தொகுதிகளில் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகவுள்ளன. 650 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான இந்தப் பொதுத் தேர்தலில் ஐந்து கோடி மக்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்திருந்தனர்.

பெட்ஃபோர்ட், கோப்லாண்ட், லீசெஸ்டர், மான்ஸ்ஃபீல்ட், மிடில்ப்ரோ, டோர்பே ஆகிய இடங்களுக்கு மேயரைத் தேர்வு செய்யவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதேவேளை – பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

பிரித்தானியாவின் வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சில் போட்டியிட்ட இலங்கை பிரஜையான ரணில் ஜெயவர்த்தனவும் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற ஆசன விவரம் வருமாறு:

வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி (Con) – 327

இடதுசாரிக் கட்சியான தொழிற் கட்சி (Labour) – 232

ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (SNP) – 56

லிபரல் ஜனநாயகக் கட்சி (LibDem) – 08

ஜனநாயக ஒன்றிய கட்சி (DUP) – 08

பிரிட்டன் சுதந்திர கட்சி (UKIP) – 01

பசுமைக் கட்சி(Green) – 01

ஏனையவை – 13

கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 650 இடங்களில் – ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களில் யாரும் வெற்றி பெற்றிருக்கவில்லை.
கன்சர்வேட்டிவ் கட்சி 302 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகித்தது.

இதனால் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியுடன்(56) இணைந்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்தது.

ஐரோப்பாவில் பல நாடுகளில் கூட்டணி அரசுகள் சகஜம் என்றாலும், பிரிட்டனில் கூட்டணி அரசு என்பது பல தசாப்தங்களில் இல்லாத ஒரு புதுமையாக இருந்தது.

கமரூன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது மனைவியுடன் பிரிட்டிஸ் மாகாராணியான இரண்டாவது எலிசபெத்தை சந்திப்பதற்கு பக்கிங்ஹாம் அரச மாளிகைக்கு சென்றுள்ளார்.

-http://www.tamilwin.com