பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: ஏவுகணையால் தாக்கியதாக தலிபான் விடியோ வெளியீடு

வெளினாட்டுத் தூதர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தினர் விடியோ ஆதாரம் வெளியிட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த நார்வே, பிலிப்பின்ஸ் நாட்டுத் தூதர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அந்த நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தியதாக அவர்கள் கூறினர்.

எனினும், இது தலிபான்களின் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது.

ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சற்று முன்னர், திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது விழுந்து தீப்பிடித்தது என்று ராணுவத்தின் சார்பில் கூறப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில், எந்த விதமான ஏவுகணை அல்லது வெடிகுண்டு வீச்சு காரணமாக இந்த விபத்து நிகழவில்லை எனத் தெரிய வந்ததாகவும் அந்த நாட்டு அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

மேலும் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறும் எனவும் பாகிஸ்தான் அறிவித்தது.

விடியோ வெளியீடு
இந்த நிலையில், பயங்கரவாத ஆதரவு வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில், ஏவுகணையைப் பயன்படுத்தி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவினர் கூறினர்.

தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் எஸ்.ஏ.எம்.-7 ரக ஏவுகணையை வைத்துள்ள சில பயங்கரவாதிகளின் காட்சி அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணையைத் தோளில் வைத்து, 3 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்க முடியும்.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்.ஏ.எம்.-7 ரக ஏவுகணைக்கு 3 கி.மீ. தொலைவிலிருக்கும் இலக்கைத் தாக்கும் திறன் உள்ளது என்பது தெரிந்ததே.

அந்த விடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஏவுகணை அதன் இலக்கை எட்டும்போது, ஹெலிகாப்டர் திரும்பியதால், அதன் பின் பகுதியில் சுழன்று கொண்டிருந்த விசையில் தாக்கியது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் வானிலேயே வெடித்துச் சிதறாமல், தரையில் மோத நேர்ந்தது என்று விடியோவின் தொடக்கத்தில், உருது மொழியில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தாக்குதல்கள்
இந்தத் தாக்குதலை தலிபான் இயக்கம் நிகழ்த்தியது என்பதை பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், எங்களுக்கு அது பற்றிக் கவலையில்லை.

கடவுளின் விருப்பத்தின் பேரில், இதுபோல மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம் என்று அந்த விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. இன்டெலிஜன்ஸ் குரூப் எனும் அமெரிக்க வலைதளம் இந்த விடியோவைத் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பகுதியில், நால்டார் பள்ளத்தாக்கில் அந்த நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை நொறுங்கி விழுந்து தீப்பிடித்தது.

இந்த விபத்தில் பாகிஸ்தானுக்கான நார்வே தூதர் லீஃப் லார்ஸன், பிலிப்பின்ஸ் தூதர் டோமிங்கோ லுஸனாரியோ, மலேசியத் தூதரின் மனைவி, இந்தோனேசியத் தூதரின் மனைவி, பாகிஸ்தான் ராணுவ விமானிகள் இருவர், ஒரு ஹெலிகாப்டர் பணியாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.

நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரில், நார்வே, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, லெபனான், மலேசியா, நெதர்லாந்து, ரோமானியா, தென்னாப்பிரிக்கா, போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் உள்பட 11 வெளிநாட்டவரும், 6 பாகிஸ்தானியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

அந்தப் பகுதியில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்து கொள்ளவிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் 3 ஹெலிகாப்டர்களில் சென்றனர்.

இரு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக இறங்கின. மூன்றாவது ஹெலிகாப்டர் இந்தக் கோர விபத்துக்கு உள்ளானது.

நவாஸ் ஷெரீஃப் தனி விமானத்தில் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. விபத்தைத் தொடர்ந்து, அவர் பயணம் செய்த விமானம் தலைநகருக்குத் திருப்பப்பட்டது.

உயிரிழந்த 7 பேரின் உடல்களும் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப், விமானப் படை தலைமைத் தளபதி சொஹைல் அமான் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளும், தூதரக அதிகாரிகளும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தீக்காயமடைந்தவர்களுக்குத் தலைநகரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசியத் தூதர் பர்ஹான் முகமது 75 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தாங்கள்தான் என்ற தலிபானின் கூற்றை பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் எஜாஸ் அகமது சௌத்ரி திட்டவட்டமாக மறுத்தார்.

பிரதமர் ஷெரீஃப் இலக்கு
விபத்து நிகழ்ந்த உடனேயே, பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி வெளியிட்ட அறிக்கையில்

தெரிவித்ததாவது:
விமானங்களை சுட்டு வீழ்த்தக் கூடிய ஏவுகணை மூலம் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானிகளும் பல வெளிநாட்டுத் தூதர்களும் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தலிபானின் குழு திட்டமிட்டது. ஆனால் வேறு விமானத்தில் பயணம் செய்ததால் அவர் உயிர் பிழைத்தார் என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி குறிப்பிட்டிருந்தார்.

-http://www.dinamani.com