படை வலிமையில் உலகின் முதலிடத்தை வகிக்கும் அமெரிக்காவுக்கும், மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்தை நோக்கி தீவிரமாக முன்னேறி வரும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா?
“நிச்சயம் மூளும்’ என்கிறார் சீன ராணுவத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பெங் குவாங்கியான்.
சீனாவின் ராணுவ உத்திகளை உருவாக்குபவர்களில் ஒருவர் எனக் கூறப்படும் அவர், அண்மையில், சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “”சீனாவின் சீற்றத்தைத் தூண்டும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து நடந்துகொண்டால் இரு நாடுகளிடையே போர் மூள்வதை யாராலும் தடுக்க முடியாது” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
“அமெரிக்காவும், சீனாவும் பொருளாதார ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், இரு நாடுகளும் போரில் இறங்க வாய்ப்பே இல்லை’ என்று பரவலான கருத்தை திட்டவட்டமாக மறுத்த அவர், “”சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருப்பது ஜென்மப் பகை; அதை புஷ் வந்தாலும் மாற்ற முடியாது, ஒபாமா வந்தாலும் மாற்ற முடியாது” என்றார்.
முக்கிய ராணுவப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இவ்வளவு கடுமையாகப் பேசியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதுதான் தென் சீனக் கடல்.
அந்தக் கடல் பகுதியிலுள்ள சில தீவுகள், மீன் வள ஆதாரங்கள் ஆகியவற்றில் சீனா உரிமை கொண்டாடி வருவது, சுற்றியுள்ள அண்டை நாடுகளுடன் சீனாவின் உறவை தொடர்ந்து கசப்பாகவே வைத்துள்ளது.
மேலும், நாளுக்கு நாள் அந்தப் பிராந்தியத்தில் தனது பிடியை சீனா இறுக்கி வருவது அண்டை நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், அன்னிய விமானங்கள் பறப்பதற்கு சீனா விதித்த தடையை மீறி, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கண்காணிப்பு விமானம் கடந்த வாரம் பறந்தது.
சீன ராணுவ அதிகாரி பெங் குவாங்கியான் அமெரிக்காவின் மீது சீறிப் பாய்ந்ததற்கு, அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள்தான் காரணம்.
தென் சீனக் கடலில் தனது நட்பு நாடுகளின் உரிமைகளை சீனா பறிப்பதைத் தட்டிக் கேட்கவே அமெரிக்க விமானம் சீனாவின் தடையை மீறிப் பறந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தென்சீனக் கடல் பகுதியில் சர்வதேச கடல் வர்த்தகப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கக் கண்காணிப்பு விமானம் அந்தப் பகுதியில் பறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த இரண்டிலுமே முழு உண்மை இல்லை என்கிறார்கள் பாதுகாப்பு விவகார நிபுணர்கள் சிலர்.
தென் சீனக் கடலின் பிரச்னைக்குரிய விவகாரங்களில் நட்பு நாடுகளுக்கு உதவ அமெரிக்கா விரும்பினால், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அந்தந்த நாடுகளையே ஊக்கப்படுத்துவதுதான் அமெரிக்காவின் சரியான ராஜதந்திரமாக இருந்திருக்கும் என நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், தென் சீனக் கடல் வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு, சீனாவால் எந்த ஆபத்தும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அப்படியென்றால், அந்தப் பகுதியில் அமெரிக்காவின் அதிரடிக்கு வேறு என்னதான் காரணம் இருக்க முடியும்?
ஆதிக்கப் போட்டிதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுவரை தென் சீனக் கடலில் தனிக்காட்டு ராஜாவாக அமெரிக்கா நடத்தி வந்த ராஜ்ஜியத்துக்கு, சீனாவின் அண்மைக் கால அதிரடி முன்னேற்ற நடவடிக்கைகள் சவால் விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அந்தப் பகுதியில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், சீனாவுக்குப் போர் பயத்தை உண்டாக்க அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த வியூகம் பலிக்காது என்று எச்சரிக்கின்றன அந்த நாட்டு ஊடகங்கள். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் எவ்வளவுதான் ஒன்றையொன்று சீண்டிக் கொண்டாலும், எதிரி நாட்டின் ராணுவ வலிமையை பரஸ்பரம் உணர்ந்து ஓர் எல்லையுடன் நிறுத்திக் கொண்டன.
அதனால்தான் ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மறைமுக யுத்தம் நிகழ்த்தினாலும் அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே நேரடியாக ஒரு சிறு மோதல் கூட ஏற்படவில்லை.
அப்படி ஏற்படும் சிறு மோதல், இரு நாடுகளையும் சுடுகாடுகளாக்கிவிடும் என்று இரு தரப்பினரும் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
ஆனால் சீனா அப்படியல்ல. அந்த நாடு ராணுவ வலிமையில் முதலிடத்தைப் பெறத் துடிக்கிறது.
அந்தத் துடிப்பை அமெரிக்கா அடக்க நினைத்தால், அடங்கிப் போவதைவிட எதிர்த்துப் போரிடுவதைத்தான் சீனா தேர்ந்தெடுக்கும் என்பது அமெரிக்கப் பார்வையாளர்களின் கணிப்பு.
“அமெரிக்காவுடன் போர் ஏற்படக்கூடாது என்ற அக்கறை சீனாவுக்கு இருந்தாலும், சீனாவுடன் போர் ஏற்படக்கூடாது என்ற அமெரிக்காவின் அக்கறையைவிட அது குறைவுதான்’ என அமெரிக்காவின் “தி ஸ்டிரெய்ட் டைம்ஸ்’ இதழ் கூறுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் போர் ஏற்படிருந்தால்கூட அமெரிக்காவால் அதன் தலையில் தட்டி உட்கார வைத்திருக்க முடியும்.
ஆனால் தற்போதைய சீன ராணுவத்தின் வலிமை, வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களையும் மூழ்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
எனவே, தென் சீனக் கடல் பிரச்னையைத் தீர்ப்பதற்கு சீனாவின் முன்பு முஷ்டியையும் மடக்காமல், அவமானகரமாக பின்வாங்கியும் செல்லாமல் மூன்றாவதாக ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிப்பது அமெரிக்காவுக்குக் காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
அன்னிய விமானங்கள் பறப்பதற்கு சீனா விதித்த தடையை மீறி, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கண்காணிப்பு விமானம் கடந்த வாரம் பறந்தது. சீன ராணுவ அதிகாரி பெங் குவாங்கியான் அமெரிக்காவின் மீது சீறிப் பாய்ந்ததற்கு, அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள்தான் காரணம்.
– தொகுப்பு: நாகா
-http://www.dinamani.com
அப்படி போர் நடந்தால் அமெரிக்காவுக்கு எனது முழு ஆதரவு