காமன்வெல்த் புதிய சீர்திருத்தங்கள் குறித்து அகமது படாவி கருத்து

மனித உரிமைகள், எச்.ஐ.வி., பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதற்கான காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை காமான்வெல்த் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், காமன்வெல்த் கூட்டம் தோல்வியில்தான் முடிவடையும் என முன்னாள் தலைமையமைச்சர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது. காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, கடந்த 2009  நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இருதரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதை அடுத்து, ஆணையர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது. ஆனால், இதுகுறித்து காமான்வெல்த் நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மலேசிய முன்னாள் தலைமையமைச்சரும் காமான்வெல்த் நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி; “மனித உரிமைகள் ஆணையர், ஒரு காவல்துறை அதிகாரியாக செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள், நடவடிக்கைக் குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி. இது காமன்வெல்த் நோக்கங்களை, உறுப்பு நாடுகள் பின்பற்ற உதவி செய்யும். இதுபோன்ற அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை காமன்வெல்த் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், இக்கூட்டமும் தோல்வியில் முடிந்ததாகவே கருதப்படும்” என்றார்.

மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.

-ABC news

TAGS: