பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் அடிமை சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். இந்நிலையில் ஐ.நா. அதிகாரியான ஜெய்னப் பங்குரா கடந்த ஏப்ரல் மாதம் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்றார். அவர் அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சீரழியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நான் பேசினேன். இது பெண்களின் உடலை வைத்து தீவிரவாதிகள் நடத்தும் போர் ஆகும்.
தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் புதிய பகுதிகளை கைப்பற்றும் போது எல்லாம் அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் செல்கிறார்கள். அவர்களின் வசம் எத்தனை சிறுமிகள், பெண்கள் உள்ளனர் என்று தெரியவில்லை.
செக்ஸ் அடிமை சந்தைகளில் சிறுமிகளை சில நூறு ரூபாய் அல்லது ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு தீவிரவாதிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கடத்தும் பெண்கள், சிறுமிகளை வெளிநாட்டில் இருந்து வரும் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக தீவிரவாதிகள் தெரிவிக்கிறார்கள்.
கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஒரு அறையில் அடைத்து அவர்களை நிர்வாணமாக்கி, குளிக்க வைக்கிறார்கள். அதன் பிறகு அவர்களை சில ஆண்கள் முன்பு நிறுத்துகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பெண்களை தேர்வு செய்கிறார்கள்.
வெளிநாட்டவர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க ஐஎஸ்ஐஎஸ் புதிய யுக்தியை கையாள்கிறது. அதாவது தங்களின் அமைப்பில் சேர்ந்தால் கன்னிகளை திருமணம் செய்யலாம் என அவர்கள் வெளிநாட்டு இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முதுகு எலும்பாக வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று ஜெய்னப் தெரிவித்துள்ளார்.
–tamil.oneindia.com