யேமெனின் தலைநகர் சனாவில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.இதைவிட இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 3000 வருடங்கள் பழமையான கட்டடத் தொகுதி ஒன்றும் இத்தாக்குதலில் நிர்மூலமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஐ.நாவின் யுனெஸ்கோ பிரிவு இத்தாக்குதலுக்கு சவுதி அரேபியா மீது கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா இன் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார நிறுவனத்தின் தலைவரான இரினா பொக்கோவா கூறுகையில், சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலானது யேமெனில் மனித அவலங்களை இன்னமும் மோசமாக்க மட்டுமே செய்யும் எனவும் அனைத்துத் தரப்பும் அங்கு அமைந்திருக்கும் பண்டைக் கலாச்சார சிறப்பு மிக்க இடங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
சனாவில் வெள்ளிக்கிழமை சிதைக்கப் பட்ட பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டடம் 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் புராதனச் சின்னப் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தது. அமெரிக்க அனுசரனையுடன் சவுதி கூட்டணி நாடுகள் மார்ச் 26 ஆம் திகதி முதற்கொண்டு ஈரானின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் நாட்டை விட்டு வெளியேறிய முன்னால் யேமென் அதிபர் மன்சூர் ஹடியினை மறுபடி பதவியில் அமர்த்தவும் முயன்று வருகின்றன. இந்நிலையில் யேமெனின் போர் பதற்ற நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள யுனிசெஃப் அமைப்பு அங்கு 20.4 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவி அவசரமாகத் தேவைப் படுகின்றது எனவும் இதில் 9.3 மில்லியன் பேர் சிறுவர்கள் என்வும் தெரிவித்துள்ளது.
இதேவேளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐ.நா சபையின் ஆதரவுடன் யேமென் கிளர்ச்சியாளர்களின் விசேட தூதர்களும் ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் உட்பட சர்வதேச உயர் மட்டக் குழுவினரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரெயின், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜேர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வளைகுடா கூட்டமைப்புக் கவுன்சில் (GCC) நாடுகளின் தூதர்கள் பங்கேற்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-http://www.4tamilmedia.com