வெளிநாட்டில் வாழும் மலேசியர்கள் இசி-க்கு எதிராக வழக்கு

வெளிநாட்டில் பணிபுரியும் ஆறு மலேசியர்கள், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய தேர்தல் ஆணைய (இசி)த்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

மனுவைப் பதிவுசெய்த அவ்வறுவரும் பிரிட்டனில் வேலை செய்கின்றனர்.13வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க தங்களை நாட்டில்-இல்லா வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இசி அவர்களைச் சாதாரண வாக்காளர்களாகத்தான் பதிந்து கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் வாக்களிக்க வேண்டுமானால் மலேசியாவுக்குத் திரும்பி வர வேண்டும்.

மனுதாரர்களில் ஒருவரான டாக்டர் தியோ ஹோன் சியோங், வாக்களித்தல் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்று கூறினார்.

“அந்த உரிமை குடிமக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்”, என்றாரவர்.

வெளிநாட்டில் உள்ள மலேசிய வாக்காளர்களுக்கு ஆதரவாக செயல்படும் மை ஓவர்சீஸ்வோட் என்ற பெயரைக் கொண்ட அக்குழு, வாக்களிக்கக் குறுகிய காலத்தில் மலேசியாவுக்குப் பறந்துவர வெளிநாட்டில் உள்ள எல்லா மலேசியராலும் முடியாது என்றது.

“வெளிநாடுகளில் உள்ள அரசு ஊழியர்களும் மாணவர்களும் லண்டனிலும், சிட்னியிலும்,நியூ யோர்கிலும், ஹாங்காங்கிலும், தோக்கியோவிலும் மற்ற இடங்களிலும் அஞ்சல்வழி வாக்களிக்க இசி ஏற்பாடுகளைச் செய்யும்போது இவர்கள் மட்டும் ஏன் இங்கு திரும்பி வர வேண்டும்”, என்றந்த குழு வினவியது.

ஆகஸ்ட் 25-இல் இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் விதிகள் திருத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய வழக்காடும் தரப்பினர், அதன் காரணமாகவே தேர்தல் விதிகளைத் திருத்த  இசியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் இம்மனுவைப் பதிவு செய்ததாக  கூறினர்.

அம்மனு, கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்டது. அதை நவம்பர் 14-இல் பரிசீலிக்க நீதிமன்றம் நாள் குறித்துள்ளது.

“நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நமக்கும் பங்கிருக்க வேண்டும். மலேசியர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது: நமக்காகத்தான் அரசாங்கம் இருக்கிறதே தவிர அரசாங்கத்துக்காக நாம் இல்லை”, என்று தியோ கூறினார்.

TAGS: