பாகிஸ்தானில் நீதி இருக்கிறதா? 14 வயதில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு தூக்கு தண்டனை

shafqat_hussain_001சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி 14 வயதில் கொலை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த 2004ம் ஆண்டு Shafqat Hussain என்ற சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்துள்ளார். அப்போது அந்த சிறுவனுக்கு வயது 14.

இந்நிலையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்ததற்காக பொலிசார் அந்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சிறுவன் கொலை செய்தது நிரூபனம் ஆனதால், அவனுக்கு தூக்கு தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பாகிஸ்தானின் சட்டப்படி, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது.

ஆனால், இந்த சட்டத்தை மீறி நீதிமன்றமே செயல்பட்டுள்ளதை சர்வதேச நாடுகள் கடுமையாக கண்டித்தன.

இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளாக சிறுவனின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் 4 முறை நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், சிறுவன் படித்த பள்ளியில் கைது செய்யப்பட்ட நாளில் அவனது வயது 14 என நிரூபிக்கும் ஆவணங்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஆவணங்களை பொலிசார் வெளியிடாமல் மறைத்துள்ளனர்.

மேலும், சிறையில் இருந்த சிறுவனிடம் ‘கைது செய்யப்பட்டபோது தனக்கு 23 வயது என கூறும்படி அவனை கொடூரமாக சித்ரவதை செய்து பொலிசார் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறுவனின் தூக்கு தண்டனை தீர்ப்பில் இத்தனை சட்ட மீறல்கள் இருப்பதால், அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என ஐரோப்பிய யூனியன் முதல் சர்வதேச மன்னிப்பு சபை வரை பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன.

ஆனால், இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி இன்று அதிகாலை 4:30 மணியளவில் அந்த நபருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்பு சபையான அம்னிஷ்ட்டியின் அதிகாரியான David Griffiths, குற்றவாளியின் வயது குறித்து பலத்த சந்தேகங்களும் மர்மங்களும் உள்ள நிலையில் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது பாகிஸ்தான் நீதி துறை வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com