மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே, இயற்கைக்கு செய்யும் மரியாதைதான்.
மனிதரிலிருந்தே மனிதன் தோன்றினாலும் மண்ணுக்கும் மனிதனுக்கும் மரபுத்தொடர்பு எப்போதும் உண்டு. இன்று உலகில் மனிதர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இனத்தவரும் கலந்து வாழும் நிலை உள்ளது.
ஆனால், கறுப்பர்கள் தோன்றிய ஆப்பிரிக்க மண்ணுக்கும், வெள்ளையர்கள் தோன்றிய ஐரோப்பிய மண்ணுக்கும், இடைப்பட்ட இந்தியர்களின் பகுதிக்கும் சீனர்களின் பூமிக்கும் விளங்கிக்கொள்ள முடியாத இயற்கையின் கர்ப்பப்பை வித்தியாசமே உண்டு.
ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு வெள்ளையன் தோன்றவும் ஐரோப்பவில் ஒரு கறுப்பன் தோன்றவும் ஆரம்பத்தில், இயற்கை வாய்ப்பு வைக்கவில்லை. கலந்து வாழ மனிதனே கற்றுக்கொண்டான்.

ஆறறிவு படைத்த மனிதன் தானே சக்திவாய்ந்த இனமாக மிருகங்களை அதன் வாழ்விடங்களிலே சென்று வேட்டையாடியதைப் போல, மனிதரில் எந்த இனத்தவர் அறிவும் ஆற்றலும் உள்ளதாக தன்னம்பிக்கை கொண்டனரோ அவர்கள் வேறு நாடுகளுக்கும் கண்டங்களுக்குமாக சென்று, அங்குள்ள மக்களின் மண் உரிமையை பறித்தார்கள் அடிமையும் படுத்தினார்கள். இப்படிப்பட்ட ஜீரணிக்க முடியாத மோசடிகளை வீர வரலாறு எனவும் பாடமாக்கினார்கள்.
கொலாம்பஸ் அமெரிக்காவில் கால் வைத்தபோது அங்கு செவ்விந்திய (Red Indians) பழங்குடியினருக்கு பல கொடுமைகள் நேர்ந்தது. அவுஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பியர்கள் புகுந்தபோது அங்கிருந்த பழங்குடியினரும் படாத பாடுபட்டனர்.
இப்படி உள்நாட்டு மக்களுக்கு, கடந்த காலங்களில் நடந்த காயங்களுக்கும் அநீதிக்கும் மருந்து போடும் விதமாக அமைந்ததுதான் உலக உள்நாட்டு மக்களுக்கான தினம்.
உலக உள்நாட்டு மக்களுக்கான உரிமையை அங்கீகரிக்கவும் மதிக்கவும் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே உலக சுகாதார அமைப்பு ஆகஸ்டு 9 ம் திகதியை உள்நாட்டு மக்களுக்கான தினமாக அறிவித்துள்ளது.

பழங்குடியினர் சர்வதேச அளவில் 220 மில்லியனிலிருந்து 350 மில்லியன் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிறப்பு உரிமைகளை ஐ.நா., சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மற்றும் உலக வங்கி ஆகியவை வழங்கியுள்ளன.
உள்நாட்டு மக்கள் எல்லோரும் பழங்குடியினர் பிரிவில் வருவதில்லை. பழங்குடியினர் என்பது ஒரு சுதேசி சமூகம். அவர்களுக்கு என ஒரு கலாச்சாரம், பேச்சு மொழி, சடங்குகள், பழக்க வழக்கங்கள் இருக்கும்.
வெளி உலகின் தொடர்பில் பெரும்பாலும் இல்லாதிருப்பார்கள். அந்த இன குழுக்கள் நம் நாட்டுக்குரிய சட்டத்திட்டங்களில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களே.
பழங்குடியினர் வாழ்க்கைமுறையில் அவர்களுக்கு ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் இருப்பதால் சராசரி சமுதாயத்தோடு கலக்க மறுக்கின்றனர்.
அவர்களும் கல்வி, நாகரீகம் பெற்று நலமடைந்த சமுதாயத்தோடு கலந்து வளர்ச்சி கண்டு வாழ்க்கை இன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதேசமயத்தில், அவர்களுடைய ஆற்றலும் இந்த நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

இந்த நன்னாளில் பொதுநல ஆர்வலர்களும், மாணவர்களும், அரசு பிரதிநிதிகளும் ஒரு குழுவாக சென்று அருகாமையில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வரலாம்.
பழங்குடியினரும் நம்மை போலவே உணர்வில் அமைந்தவர்கள் என்பது, அவர்களை புரிந்துகொள்ள பேருதவி புரியும். அதை பயன்படுத்தி, அவர்களையும் ஈர்த்துவிடக்கூடிய எத்தனையோ விஷயங்கள் நம்மிடம் இருக்கின்றன.
எத்தனையோ வகையான சிருஷ்டிகளின் தொகுப்புதான் இந்த இயற்கை. அதுபோல, உலகில் பழங்குடி சுதேசி சமூகமும் இருப்பது உலகத்துக்கு அழகுதான். குறைந்தது அந்த பழங்குடியினர் ஆக்கிரமிப்பில் உள்ள இயற்கையாவது தன்னை சிதைத்துக்கொள்ளாமல் இருக்கும் என்பதும் உண்மைதான்.
எந்த அறிவியல் சாதனங்களும் இல்லாமல், ஒரு சமூகமாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்து வருவதிலும் ஒருவிதமான இயற்கை அணுகுமுறை அறிவு இருக்கிறது.
அமேசான் காடுகள், அந்தமான் நிக்கோபார், மாலத்தீவு போன்ற தீவுகளிலும் பல நாடுகளுக்குள்ளும் பழங்குடியினர் வாழ்கின்றனர்.
ஒரு புறம் காடு, மலைகளில் தனித்து வாழும் பழங்குடியினரை சம உரிமை கொடுத்து சமுதாயத்தோடு சேர்த்துக்கொள்ள உலக அமைப்புகள் விரும்புகிறது.
இலங்கை போன்ற சில நாடுகள் இனப்பிரச்சினையை உருவாக்கி, சிறுபான்மை சமுதாயத்தினர் உரிமையை பறித்து, பழங்குடியினர் போல ஒதுக்கிவிடவும் திட்டமிடுகிறது.
அதை உலக அமைப்புகளும் கண்டுகொள்ளாது இருப்பது, மேலும் வேதனையானது. உலக பழங்குடியினர் தினமான இன்று அவர்களை பாதுகாக்க வழிவகுப்போம் வாழ்த்துவோம்.

-http://world.lankasri.com


























நமது நாட்டில் உள்ள பழங்குடியினரின் நிலமை மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது