ரோஸ்மா மான்சோர் 24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீதான சர்ச்சை இன்னும் ஒயவில்லை. இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் எதிர்ப்பாளர்கள் அவருடைய புதல்வி மீது கண்ணோட்டம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
பிரதமரின் புதல்வி எனக் கூறப்பட்ட ஒரு மாது ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய பேரங்காடியான டேவிட் ஜோன்ஸில் பொருட்களை வாங்கச் சென்ற போது 60,000 ஆஸ்திரேலிய டாலர் ( 195,000 ரிங்கிட்) வரையில் செலவு செய்ததாக மேற்கு ஆஸ்திரேலிய நாளேடு ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிரதமருடைய எதிர்ப்பாளர்கள் அவ்வாறு செய்கின்றனர்.
அந்தச் செய்தியின் உண்மை நிலை குறித்து உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அந்தச் சிறிய செய்தியின் பிரதி- தேதியும் எழுதியவர் பெயரும் இல்லாமல் – மலேசியக் கடலோரத்தை அடைந்துள்ளது. அதனை எதிர்த்தரப்பு வலைப்பதிவாளர்களும் சுவாரா கெஅடிலானும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
“பேராளர்கள் சுற்றுலா செல்கின்றனர். பொருட்களை வாங்குகின்றனர்” என்னும் தலைப்பைக் கொண்ட அந்தச் செய்தி பல பேஸ் புக் பக்கங்களிலும் காணப்படுகிறது.
முன்னாள் பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினரும் செகுபார்ட் என அழைக்கப்படுகின்றவருமான பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் அந்தச் செய்தி குறித்து தமது வலைப்பதிவில் கருத்துரைத்துள்ளார்.
“மக்கள் இங்கு தாய் நாட்டில் விலை ஏற்றத்தைச் சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல்வாதிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் வெளிநாடுகளில் ஆடம்பரமாக அதிகமாகச் செலவு செய்கின்றனர்” என அவர் எழுதியுள்ளார்.
“விலை ஏற்றத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். வாழ்க்கை செலவுகள் உயருவதைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். அதே வேளையில் அவர்கள் பொது மக்களுக்கு மேலும் சிரமத்தைத் தரக் கூடிய வரிகளை அறிமுகம் செய்துள்ளனர். அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.”
“24.45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மோதிரம் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு இன்னும் பதில் சொல்லப்படவில்லை. அந்த வேளையில் நஜிப்-ரோஸ்மாவின் புதல்வி மிதமிஞ்சி செலவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.”
அடையாளம் கூறப்படாத புதல்வியும் தலைச் சீமாட்டியும்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்-தில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள தமது பெற்றோர்களுடன் அடையாளம் கூறப்படாத அந்தப் புதல்வியும் சென்றுள்ளார்.
சுவாரா கெஅடிலான் அந்தச் செய்தியை தனது இணையப் பதிப்பில் வெளியிட்டது. தகவல், தொடர்பு, பண்பாட்டு துணை அமைச்சர் மாக்லின் டென்னிஸ் டிக்குருஸ், பிரதமர் துறை துணை அமைச்சர் டாக்டர் மாஷித்தா இப்ராஹிம், பிபிபி தலைவர் கேவியஸ் ஆகியோரைக் கொண்ட குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அடையாளம் கூறப்படாத தலைச் சீமாட்டி மேற்கு ஆஸ்திலிய முத்துக்களை வாங்குவதற்கு 150,000 ஆஸ்திரேலிய டாலரையும்(487,000 ரிங்கிட்) ‘நஜிப்பின் புதல்வி’ 60,000 ஆஸ்திரேலிய டாலரையும் செலவு செய்த போது வணிகர்களுக்கு கொழுத்த ஆதாயம் கிடைத்ததாகவும் அந்த எதிர்க்கட்சியின் இணைய செய்தித் தளம் கூறிக் கொண்டது.
காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் அந்நியப் பிரமுகர்கள் பொருட்களை வாங்குவதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழு இயக்குநர் ரிச்சர்ட் முயிர்ஹெட் கூறியதாகவும் அது குறிப்பிட்டது.