சோகம் மாநாடு நடைபெறும் பெர்த் நகரில் அமைதிப்பேரணியில் பெர்சேகான் மலேசியா

அக்டோபர் 28-இல், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு(ச்சோகம்) தொடங்கிய வேளையில் அந்நகரின் மத்திய வாணிக வட்டத்தில் மலேசியர்கள் அடங்கிய ஒரு குழு-பெர்சேகான் மலேசியா- அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியது.

காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடைபெறும் வேளையில் 20 குழுக்கள் அடங்கிய ச்சோகம் எக்‌ஷன் நெட்வோர்க் (சிஏஎன்) என்னும் கூட்டமைப்பு, காமன்வெல்த்தில் நிலவும் பல்வேறு விவகாரங்களை உலகின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.அந்த 20 குழுக்களில் பெர்சேகான் மலேசியா (பெர்த்)வும் ஒன்று.

சுமார் 70 மலேசியர்கள், பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட் தலைமையில் அப்பேரணியில் கலந்துகொண்டு மலேசியாவில் தேர்தல் சீரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியத்தைக் கவனப்படுத்தினர்.

பேரணியில் வோங், சிஏஎன் பேச்சாளர் அலெக்ஸ் பேய்ன்பிரிட்ஜ் உள்பட பலரும் பேசினர்.

வோங் தமதுரையில், “காமன்வெல்த் சகோதர, சகோதரிகளே, உங்கள் முன்னிலையில், மலேசியர்களின் கவலையைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் எடுத்துரைக்கவும் உங்களின் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதுபோல் எங்களின் போராட்டத்துக்கு உங்களின் ஆதரவைப் பெறவும் இங்கு வந்துள்ளேன்”, என்றார்.

பெர்சேகான் மலேசியா(பெர்த்)வின் இரண்டு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.ஒன்று,நஜிப் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவசியமான தேர்தல்சீரமைப்புகளைச் செயல்படுத்த வேண்டும், மற்றது, தேர்தலைப் பார்வையிட பார்வையாளர் குழுவொன்றை அனுப்புமாறு காமன்வெல்த்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பேரணி முழுக்க மலேசியர்கள் நாட்டுப்பண்ணையும் ராசா சாயாங் முதலிய நாட்டுப்பாடல்களையும் பாடிக் கொண்டிருந்தனர்.

கோலாலம்பூரில் ஜூலை 9-இல் நடைபெற்ற பெர்சே 2.0 பேரணியைத் தொடர்ந்து பெர்சேகான் மலேசியா(பெர்த்) அமைக்கப்பட்டதாக அதன் செயல்குழு உறுப்பினரான ஜோர்டன் கூறினார்.

அந்த அமைப்பு போதுமான ஆதாரங்களின்றி சிரமப்பட்டாலும் பெர்த்தில் உள்ள மலேசியர்களை ஒன்றுதிரட்டி தாய்நாட்டு விவகாரங்களில் அவர்கள் அக்கறையுடன் ஈடுபடுவதை ஊக்குவிக்க மிகவும் பாடுப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பேரணி மூலமாக பெர்சேகான் மலேசியா (பெர்த்), அதன் எண்ணத்தை மலேசியப் பேராளர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றிருப்பதாகவே அவர் நம்புகிறார்.

இதனிடையே, அங்கிருந்த மலேசிய சுற்றுப்பயணி ஒருவர்-ஃபைசான் என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்-பெர்த் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நடந்துகொண்ட விதம் பற்றிக் கருத்துரைத்தார்.

“நிறைய வேறுபாடுகளைப் பார்த்தேன். கோலாலம்பூர் பெர்சே பேரணியில் கலந்துகொண்டபோது (துங் சின்) மருத்துவ மனைக்கு முன் கண்ணீர் புகைக் குண்டால் தாக்கப்பட்டேன்.

“ஆனால் இங்கு, சுதந்திரமாக, எவ்வித அச்சமுமின்றி கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கிறார்கள்”, என்றாரவர். 

மலேசிய மாணவியான கிறிஸ்டலும் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டவர்களில் ஒருவர்: “குறைந்த பட்சம் அரசியல் நடப்புகள் பற்றி அறிந்தாவது வைத்திருப்பது ஒரு குடிமகனின் கடமையாகும்.

“அன்புக்குரிய நாட்டின்மீதுகொண்டுள்ள அக்கறையின் காரணமாகத்தான் பேரணியை ஆதரித்து அதில் கலந்துகொண்டேன். மலேசியன் என்ற முறையில் என் கடமையைத்தான் செய்தேன்.

“தெருவில் பேரணி நடத்தியதால் (உடனே) மாற்றம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் சிறந்த எதிர்காலத்துக்காக, முன்னிலும் சிறந்த மலேசியா உருவாக வேண்டும் என்பதற்காக மாற்றத்துக்கான போராட்டத்தின் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”, என்றார்.

பேரணியில் கலந்துகொண்ட இன்னொருவர், இவான், நாட்டுக்குத் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுள்ளவர்.

“நான் ஓர் அரசியல்வாதி அல்ல. ஊடகங்கள் முன்னே நின்று அரசியல்வாதிகள் பற்றிக் கருத்துரைக்கவோ ஊழலை எப்படி ஒழிக்க வேண்டும் என்று கூறவோ என்னால் முடியாது.அதனால், அதை உலகின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல என்னால் முடிந்ததை இப்படிச் செய்கிறேன்.” வோங், அரசியல் ஒடுக்குமுறை பற்றிய அச்சத்தைக் கைவிட்டு மலேசியர்கள் பேரணிகளில் கலந்துகொள்ள முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“அச்சம் கொள்ள காரணமே இல்லை. நாம் சுதந்திரமானவர்கள்தானே. எல்லாரும்  முன்வந்தால், மலேசியா ஒரு சிறந்த இடமாக மாறும்.”

TAGS: