இசி, பிஎஸ்சி-இன் முதல் சாட்சி

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), நாளை அதன் முதலாவது சாட்சியாக தேர்தல் ஆணையத்தை அழைக்கும்.

வாக்காளர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகள் பற்றி அதனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிஎஸ்சி-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் அஸ்மின் அலி(பிகேஆர்-கோம்பாக்), டாக்டர் ஹட்டா ரம்லி(பாஸ்- கோலா கிராய்), அந்தோனி லோக்(டிஏபி-ராசா) கூறினர்.

அழியா மையின் பயனீடு, வாக்காளர் பட்டியலைச் சரிப்படுத்துதல், பரப்புரைக்கு 21-நாள்களை ஒதுக்குதல் போன்றவற்றுக்குத் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை, இசியின் தலைஅசைவே போதுமானது என்று அஸ்மின் அலி வலியுறுத்தினார்.

“பிஎஸ்சி பல்லில்லா வாரியமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. தேர்தல் சீரமைப்புகளைச் செய்ய ஆறு மாதங்களில் பிஎஸ்சி அதன் பணியை முடிக்கும்வரை காத்திருக்க வேண்டியதில்லை”, என்றாரவர்.

“தேர்தல் நடைமுறைகளைச் சீரமப்பதில் இசி உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தேவையானவற்றை அதுவே செய்யும்.” 

இன்று பிஎஸ்சியின் இரண்டாவது கூட்டத்தில் பல கோரிக்கைகளை முன்வைக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிஎஸ்சி நடுநிலை நின்று செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர். அத்துடன், அதனிடமிருந்து அது தன் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்ற உத்தரவாதத்தை பெறவும் முயல்வர்.

பெர்சே 2.0 அதன் எட்டுக் கோரிக்கைகளையும் விளக்கப் போதுமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிஎஸ்சியைக் கேட்டுக்கொள்ளப்போவதாகவும் அஸ்மின் கூறினார்.

“ இக்குழுவைப் பயன்படுத்தித் தேர்தல் சீரமைப்புகளைத் தாமதப்படுத்த இடமளிக்க மாட்டோம்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

இசியைப் பிரதிநிதித்து அதன் தலைவரோ துணைத் தலைவரோதான் சாட்சியமளிக்க வேண்டும் என்று லோக் குறிப்பிட்டார்.

“அவர்கள் கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பி வைப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்களால் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க இயலாது”, என்றாரவர்.

வாக்காளர் புதிதாகக் காணப்படும் சில குளறுபடிகளை லோக் செய்தியாளர்களிடம் சுட்டிக்காண்பித்தார். நெகிரி செம்பிலானில் ஐயத்துக்கிடமான வேட்பாளர்கள் சிலர் சாதாரண வாக்காளர்களாகவும் அஞ்சல் வாக்காளர்களாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவர் காட்டினார்.

“நிறைய ஆதாரங்களையெல்லாம் கொடுத்திருக்கிறோம். இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய அவர்கள் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை”, என்று லோக் கூறினார்.

கடந்த மாதம் அமைக்கப்பட்ட பிஎஸ்சி-இல் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும், பக்காத்தானிலிருந்து மூவரும் ஒரு சுயேச்சை எம்பியும் இடம்பெற்றுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி அதற்குத் தலைமை தாங்குகிறார்.

அதில் இடம்பெற்றுள்ள மற்ற நான்கு பிஎன் பிரதிநிதிகள், காப்பிட் எம்பி அலெக்சாண்டர் நந்தா லிங்கி(பிபிபி), கங்கார் எம்பி முகம்மட் ரட்சி ஷேக் அஹ்மட்(அம்னோ), அலோர் காஜா எம்பி ஃபோங் சான் ஓன்(மசீச), ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன்(மஇகா) ஆகியோராவர்.

குழுவின் ஒன்பதாவது உறுப்பினர் வங்சா மாஜு எம்பி வீ சூ கியோங்(சுயேச்சை).

அக்குழு தேர்தல் சீரமைப்பு குறித்த பரிந்துரைகள் முன்வைக்க ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TAGS: