சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி 15 வயது சிறுவன் உட்பட பத்து பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா, ஈராக் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கொடூரமான முறையில் தண்டனையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி 15 வயது சிறுவன் உட்பட 10 பேரை அவர்கள் படுகொலை செய்துள்ளதாக சிரியாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ரஸ்தான் பகுதியில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், வட அலிப்போவில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு சிறுவனும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவதானக்குழுவின் தலைவர் ரமி அப்தெல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, படுகொலை செய்யப்பட்ட சிறுவன் 14 வயதின் போது கைது செய்யப்பட்டான். எனினும் கொலை செய்யப்படும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்த படுகொலைகள் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நிகழ்ந்தது. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை படம் பிடிக்க முயன்றவர்களின் கெமிராவையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உடைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கூறி ஐ.எஸ். தீவிரவாதிகள் இதுவரை குறைந்தது 30 பேரை படுகொலை செய்திருக்கலாம் என்று ஐ.நா. மன்றம் தெரிவித்துள்ளது.
-http://world.lankasri.com