வங்காளதேசத்தில் தொடர்ந்து வெளிநாட்டினரை போட்டுத்தள்ளும் தீவிரவாதிகள்: இன்று ஜப்பான் நாட்டுக்காரர் சுட்டுக்கொலை

Bangladeshடாக்கா, அக்.3- இத்தாலிய சமூகச் சேவகரான சீசாரே டவெல்லா(50) நெதர்லாந்து நாட்டின் பிரபல தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வங்காளதேச தலைநகரான டாக்காவில் சில ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இங்குள்ள அரசு உயரதிகாரிகள் தங்கியுள்ள பாதுகாப்பு நிறைந்த மார்க்கெட் குல்ஷன் பகுதியில் கடந்த 28-ம் தேதி மாலை அவர் ‘ஜாகிங்’ பயற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு நாங்கள்தான் பொறுப்பு என வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஐ.எஸ். தீவிரவாதக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டினரான ஹோஷி குனியோ(65) என்பவர் இங்குள்ள ரங்புரா மாவட்டம், கவுனியா நகரில் இன்று காலை சுமார் 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஒரே வாரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியாகியுள்ள சம்பவம் வங்காளதேசத்தில் வாழும் வெளிநாட்டினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் இங்கு நான்கு வலைத்தள எழுத்தாளர்கள் இதேபோல், பொது இடங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அந்த கொலைகளுக்கு அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு குழுக்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது, நினைவிருக்கலாம்.

-http://www.maalaimalar.com