பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து தூண்டி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டினார்.
தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைப்போவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தெரிவித்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ஷெரீஃப் தற்போது முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து சனிக்கிழமை அவர் லண்டனுக்குச் சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி நிலவுவதற்கான செயல்திட்டங்கள் பாகிஸ்தான் சார்பில் ஐ.நா. சபையில் முன்வைக்கப்பட்டன.
இரு நாடுகள் இடையே ஸ்திரமான சூழல் நிலவுவதற்கு ஏற்ற வகையில், நடைமுறைக்கு சாத்தியமான செயல்திட்டங்களையே பாகிஸ்தான் தெரிவித்தது. எனினும், இதனை இந்தியா நிராகரித்துவிட்டது.
இரு நாடுகளுக்கும் சுமார் 70 ஆண்டுகளாக இருக்கும் விரோதப்போக்கால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. பாகிஸ்தானுடனான மோதல் போக்கை இந்தியா கைவிட வேண்டும். பாகிஸ்தானுடன் சுமுக உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாங்கள் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா விரைவில் முன்வர வேண்டும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருகிறது. இதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மறைமுகப் போரில் ஈடுபடுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் நவாஷ் ஷெரீஃப்.
சர்தாஜ் அஜீஸ் அழைப்பு: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (ஐ.ஒ.சி.) வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பேசியதாவது: பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. காஷ்மீர் உள்பட தீர்வு காணப்படாமல் இருக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் அமைதி வழியில் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துமாறும் இந்தியாவிடம் ஐ.ஒ.சி. அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்றார் சர்தாஜ் அஜீஸ்.
-http://www.dinamani.com
உண்மை தான்
ரஷ்யா ஆப்கானிஸ்தானில் நுழைந்ததிலிருந்து இன்று வரை பயங்கரவாதத்தை ஏற்றுமதி இறக்குமதி செய்வது பாகிஸ்தான். பெனசிர் புட்டோ கொல்லப் பட்டதற்கு இந்நாள் வரை பதில் இல்லை. இனி எந்நாளும் வராது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் ஜனநாயக அரசைக் கவிழ்த்து இராணுவ ஆட்சி வந்த பொழுதும் பயங்கரவாதம் இல்லை!. ஒசாமா பின் லாடனின் முகவரியை அமெரிக்காவிற்கு கொடுத்து வானில் பறந்து சென்று கொன்று விட்டு அந்நாட்டு எல்லையைத் தாண்டும் வரை அந்நாட்டு இராணுவ வேண்டுகோளுக்கு பதில் அளிக்காமலேயே மௌனம் சாதித்த அப்துல் சர்தாரும் இதுவரை உண்மையை ஒற்றுக் கொள்ளவில்லை.. அப்புறம் எப்படி நவாஸ் ஷெரிப் அண்டை நாட்டைக் குறை சொல்கின்றார்? எப்படியும் பேசலாம் என்பதற்கு உரிய இடம் ஐக்கியம் இல்லாத ஆட்டு மந்தைகளின் சபை என்பதால் பாகிஸ்தான் அப்படி ஒரு செயல் நடவடிக்கையை முன் வைத்ததோ?