ரஷியா வான்வழித் தாக்குதல்:சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் அழிப்பு

Russian-Air-Forceசிரியாவில் ரஷிய போர் விமானங்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

மாஸ்கோவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ரஷிய விமானப் படையின் எஸ்யு34, எஸ்யு24எம் ரக போர் விமானங்கள் சிரியாவில் ராக்கா பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 9 நிலைகள் அழிக்கப்பட்டன.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு முகாம் எனத் தெரிய வந்த பதுங்குமிடத்தில், கான்கிரீட்டைத் துளைக்கும் குண்டுகளை எஸ்யு34 ரக விமானங்கள் வீசின. இதில் அந்தப் பதுங்குமிடம் தீக்கோளமாக வெடித்துச் சிதறியது. அந்த இடம் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிகிறது. ரஷியத் தாக்குதலில் அந்த இடம் முற்றிலும் அழிக்கப்பட்டது.

ஜிஸர் அல்-ஷுகுர் நகர் அருகேயுள்ள மலைப்பகுதியில் நிகழ்த்திய தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன.

இத்லிப் மாகாணம், மாரத் அல்-நுமான் நகருக்கு அருகே உள்ள பகுதியில் இயங்கி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டன.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் ரஷிய ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிரியாவின் ராக்கா நகரைத் தங்களது தலைநகராக அறிவித்துள்ளனர். அந்த இடத்திலும் அதனைச் சுற்றியும் ரஷியா கடந்த இரு நாட்களாகக் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

-http://www.dinamani.com