உலு சிலாங்கூர் எம்பி: நடுநிலையான பராமரிப்பு அரசாங்கத்தை அமைக்கலாம்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் “நடுநிலையான பராமரிப்பு அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் என உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் யோசனை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அவர் சமர்பித்த பல யோசனைகளில் அதுவும் ஒன்றாகும்.

நடுநிலையானவர்கள் எனக் கருதப்படும் ஒரு நபரை அல்லது பல நபர்களைக் கொண்ட குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

இதர பல யோசனைகளுடன் அந்தப் பரிந்துரையும் கமலநாதனின் இணையத் தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன் முகவரி http://www.pkamalanathan.com என்பதாகும்.

அழியாத மையைப் பயன்படுத்துவது, அஞ்சல் வாக்களிப்பு முறையை திருத்துவது, பிரச்சார காலத்தை நீட்டிப்பது, ஊடகங்களில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நியாயமான இடத்தை வழங்குவது ஆகியவற்றையும் கமலநாதன் பரிந்துரைத்துள்ளார்.

வெளிநாட்டு வாக்களிப்பு, முன் கூட்டியே வாக்களிப்பது. அஞ்சல் வாக்குகள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சொன்னார்.

தேர்தல் செலவுகள் சுயேச்சையான முறையில் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் கமலநாதன் கருதுகிறார்.

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார்.

“அரசாங்கம் தில்லுமுல்லு செய்கிறது என்ற சந்தேகம் ஏதும் இல்லாமல் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு இணக்கம் காண்பதற்காக” அந்தக் குழு அமைக்கப்படுவதாக நஜிப் அப்போது கூறினார்.

பெர்னாமா

TAGS: