எகிப்தில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரஷ்யாவிற்கு சொந்தமான Kolavia 7K9268 என்ற விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியாகினர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் ’சிரியாவில் உள்ள தங்களது முகாம்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் புரிவதற்கு பதிலடியாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக’ சமூக வலைத்தளத்தில் பரபரப்பு தகவல் வெளியிட்டனர்.
எனினும் இதனை ரஷ்யா மற்றும் எகிப்து மறுத்து வருகின்றன. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விமானம் வானத்தில் இருக்கும் போதே உடைந்திருக்கலாம் என்று ரஷ்யாவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் நெராட்கொ தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்துள்ள இடத்துக்கு பல மைல் தொலைவிலும் அதன் ஒரு சில பாகங்கள் கிடைத்துள்ளதால் விமானம் வானத்திலேயே வெடித்து சிதறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் வெடிகுண்டு வைத்து விமானம் தகர்க்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக தெளிவான பதில் கிடைக்கும் வரை விபத்து நடைபெற்ற பாதை வழியாக விமானங்களை இயக்க போவதில்லை என்று லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ் ஏர், அரேபியா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com