தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்த செயற்கை தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் பறந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா.
ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருணே, மலேசியா உள்ளிட்ட நாடுகள் தென் சீனா கடற்பரப்பில் தங்களுக்கும் உரிமை உள்ளது என கூறி வருகின்றனர்.
இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் அதிகம் உள்ளது தென்சீனா கடற்பரப்பு. இதனால் இக்கடற்பரப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் வகையில் 2 செயற்கை தீவுகளையும் சீனா உருவாக்கி உள்ளது. இதில் போர் விமானங்களை நிறுத்தும் விமான தளத்தையும் சீனா அமைத்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று சீனாவின் இந்த செயற்கைத் தீவு அருகே ரோந்துப் பணியை மேற்கொண்டது. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதே காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இக்கடற்பரப்பை மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பரப்பு என்றே சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனிடையே கடந்த நவ. 8,9 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் போர் விமானங்கள் இதே சீனாவின் செயற்கைத் தீவு பகுதியில் பறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த போர் விமானங்களை சீனா தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இருப்பினும் தென் சீனா கடற்பரப்பில் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என அமெரிக்கா கூறியிருப்பதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் நீடிக்கிறது.