போலீசார்: மறியலை நடத்த எம்டியூசி அனுமதி பெற வேண்டும்

1955ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புச் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு முழுவதும் மறியல்களை நடத்துவதற்கு எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் போலீஸ் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் சாலே மாட் ரஷிட் கூறுகிறார்.

மறியல்கள் நடத்தப்படும் இடங்கள், நோக்கங்கள் குறித்து எம்டியூசி கடிதம் அனுப்பியுள்ள போதிலும் அனுமதிகளுக்கு அது இன்னும் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் சொன்னார். ஏனெனில் 1967ம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் அனுமதிக்கு விண்ணப்பிப்பது ஒரு தேவை  என்றார் அவர்.

“இந்த விவகாரத்தில் போலீஸ் சட்டம் கவனிக்கப்பட வேண்டும். எந்த ஒரு ஊர்வலமோ அல்லது பொது கூட்டமோ அந்த மாவட்ட போலீஸ் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். அந்தக் கூட்டங்கள் பொது ஒழுங்கைச் சீர்குலைக்குமா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.”

“100,000 பேர் கூடினாலும் அது பொருட்டல்ல. அது பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் மருட்டலாக இல்லை என்றால் நாங்கள் அனுமதி கொடுப்போம். பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்காத அளவுக்கு நாங்கள் கொடுமையானவர்கள் அல்ல,” என கோலாலம்பூர் செராஸில் உள்ள அரச மலேசிய போலீஸ் கல்லூரியில் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அதற்கு முன்னர் அவர், புதிதாகத் தகுதி பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் தேர்ச்சி அணிவகுப்பை பார்வையிட்டார்.

அக்டோபர் மாதம் 6ம் தேதி நாடாளுமன்றம் நிறைவேற்றிய வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்களை ஆட்சேபித்து நடத்தப்படும் அந்த மறியல்கள் அலுவலக நேரத்துக்குப் பின்னர் மாலை மணி 5 முதல் மாலை மணி 6.30 வரை நடத்தப்படுவதால் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் ஏற்படாது என எம்டியூசி தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம் மான்சோர் நேற்று கூறியிருந்தார்.

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடத்தப்படும் மறியல்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் 300 முதல் 500 உறுப்பினர்கள் வரை கூடுவர் என்றும் அவர் சொன்னார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு எம்டியூசி அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் அவர்கள் மறியல்கள் அமைதியாக நடத்தப்படுவதை உறுதி செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா

TAGS: