பெர்க்காசா: அம்பிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்

வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீனிவாசனை “dajal” என வருணித்துள்ள மலாய் வலச்சாரி போராட்ட அமைப்பான பெர்க்காசா, “ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதின் மூலம் தவறான போதனைகளை மேம்படுத்துவதற்காக” அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது

அம்பிகா மனித உரிமைகளை இணைக்கும் அதனுடன் ஒரினச் சேர்க்கைக்கு ஊக்கமூட்டும் “புதிய சமயத்தை” கொண்டு வருவதாக வீரா பெர்க்காசாவின் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் கூறினார்.

வரும் நவம்பர் 9ம் தேதி அம்பிகா தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள செக்சுவாலிட்டி மெர்தேகா பட்டறை பற்றி அவர் கருத்துரைத்தார்.

“பெர்க்காசா அதனை எதிர்க்கிறது. ஏனெனில் ஒரினச் சேர்க்கை என்பது தவறான நடவடிக்கை ஆகும். அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் சீர்குலைப்பதைக் காண பெர்க்காசா விரும்பவில்லை.”

“ஒரினச் சேர்க்கையை மற்ற சமயங்களும் கண்டிக்கின்றன. ஆகவே போலீசாரும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் விரைவாக நடவடிக்கை (அம்பிகாவுக்கு எதிராக) எடுக்க வேண்டும்.”

“அம்பிகாவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அது நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”

செக்சுவாலிட்டி மெர்தேகாவுக்கு எதிராக மகஜர் ஒன்றை தேசிய போலீஸ் படைத் தலைவருக்கு சமர்பித்ததுடன் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகாரும் செய்த பின்னர் இர்வான் இன்று நிருபர்களிடம் பேசினார்.

நவம்பர் 9ம் தேதி நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செக்சுவாலிட்டி மெர்தேகா, ஒரு விழாவாகும். அது திருநங்கைகளுக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது.

அந்த விழா ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என செக்சுவாலிட்டி மெர்தேகா அமைப்பை தோறுவித்தவர்களில் ஒருவரான பாங் கீ  தெய்க் கூறினார்.